அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த இந்நாட்டு மக்களுக்காக நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலின் அடிப்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 9 அலகுகள் அளவுக்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டு பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
காலை 6.58 மணியளவில், சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட சுனாமி அலைகளில் மிகவும் வலுவானது, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் இலங்கையை அடைந்தது.
காலை 9.22 மணியளவில் அந்த சுனாமி அலைகள் இலங்கையை தாக்கியது.
என்ன நடந்தது என்பதைச் சிந்திக்கக்கூட நேரம் விடாமல் சில நிமிடங்களில் நாட்டில் முப்பத்தைந்தாயிரம் உயிர்களைப் பறித்த சுனாமி அலைகள் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அழித்தன.
இச்சம்பவத்தால் மறைந்தவர்களை நினைவுகூரும் வகையில் முற்பகல் 09.25 முதல் 09.27 வரை 2 நிமிடம் வருடாந்த மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்தப் பின்னணியில், சுனாமி குறித்த முன்கூட்டியே அறிவிக்கும் புதிய தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.
“சுனாமி அபாயம் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் தொடர் தொலைபேசி ஒலியுடன் உடனடியாக தகவல் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சித் திட்டம் அனைத்து தொலைபேசி சேவையாளர்களின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படும்.” என்றார்.