ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்தவுடன் அதனை உடனடியாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒழுக்கம் தொடர்பான விதிகள்
ஏற்கனவே, ஒழுக்கம் தொடர்பான விதிகளை உள்ளடக்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதனை கடைப்பிடிக்காமையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. அதனை கருத்திற்கொண்டு, புதிய சுற்று நிருபம் வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, அடுத்த வாரத்தின் இரண்டு நாட்கள், அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், கல்வி பணிப்பாளர்கள் அனைவரும் கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு நாட்களிலும், பாடசாலைகளின் ஒழுக்கம், கல்வி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.