தனிநபராக ரிஸ்வான் 90 ரன் விளாசியும் தோல்வி..பாகிஸ்தானை சம்பவம் செய்த இருவர்

127

 

பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முகமது ரிஸ்வான் அதிரடி அரைசதம்
Hagley Oval மைதானத்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 2வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. அதனைத் தொடர்ந்து பாபர் அசாம் 19 ஓட்டங்களில் மில்னே ஓவரில் அவுட் ஆனார். அடுத்து ஃபஹர் ஜமான் (9), சஹிப்ஸடா (1) இருவரையும் ஒரே ஓவரில் பெர்குசன் வெளியேற்றினார்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அதிரடியில் மிரட்டினார். அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் விளாசினார்.

அதேபோல் முகமது நவாஸ் 9 பந்தில் 3 சிக்ஸர் விளாசி 21 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் சேர்த்தது. ஹென்றி மற்றும் பெர்குசன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, பாகிஸ்தான் கேப்டன் ஷாஹீன் ஷா அஃப்ரிடி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார்.

அவரது பந்துவீச்சில் ஃபின் ஆலன் (8), டிம் செய்ஃபெர்ட் (0), வில் யங் (4) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என நியூசிலாந்து தடுமாறியது.

டேர்ல் மிட்செல்-கிளென் பிலிப்ஸ் கூட்டணி
அதன் பின்னர் கூட்டணி அமைத்த டேர்ல் மிட்செல், கிளென் பிலிப்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இருவருமே அதிரடியாக அரைசதம் விளாசியதன் மூலம், நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

டேர்ல் மிட்செல் 44 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 52 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், நியூசிலாந்து அணி 4-0 என உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி 21ஆம் திகதி இதே மைதானத்தில் நடக்க உள்ளது.

SHARE