பூரனின் வெற்றிநடைக்கு முட்டுக்கட்டை போட்ட இலங்கை வீரர்கள்! கடைசி பந்தில் 3 ரன் ஓடியே எடுத்த வீரர்

117

 

துபாயில் நடந்த போட்டியில் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் MI எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் 15வது போட்டியில் டெஸெர்ட் வைப்பர்ஸ் மற்றும் MI எமிரேட்ஸ் மோதின. MI எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பாடியது.

இலங்கையின் குஷால் பெரேரா 2வது பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வசீம் (19), பிளெட்சர் (18) ஆகியோரை லுக் வுட் வெளியேற்றினார்.

கேப்டன் நிக்கோலஸ் பூரன் 17 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கையின் இளம் பந்துவீச்சாளர் பத்திரனா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து ஹசரங்கா ஓவரில் ராயுடு (23) வெளியேறினார். விக்கெட்டுகள் சரிந்த நிலையில் அகேல் ஹொசேய்ன் மற்றும் டிம் டேவிட் ஸ்கோரை உயர்ந்தினர்.

அகேல் ஹொசேய்ன் 24 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, பத்திரனா ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியில் மிரட்டிய டேவிட் 14 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, MI எமிரேட்ஸ் 149 ஓட்டங்கள் எடுத்தது. ஆமிர் 3 விக்கெட்டுகளும், பத்திரனா மற்றும் லுக் வுட் தலா 2 விக்கெட்டுகளும், ஹசரங்கா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய டெஸெர்ட் அணி தொடக்கத்தில் விக்கெட்களை பறிகொடுத்தது. ஆனால் ஹசரங்கா மற்றும் அசாம் கான் பார்ட்னர்ஷிப் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

அசாம் கான் 20 (12) ஓட்டங்களில் அவுட் ஆக, 22 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த ஹசரங்கா, பிராவோ ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஸ்கோர் உயர்ந்தாலும் மறுபுறம் விக்கெட்டுகளின் வீழ்ச்சியால் ஆட்டம் பரபரப்பானது. கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ஷாஹீன் அப்ரிடி அந்த ரன்னை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ஷெர்பானே ரூதர்போர்டு 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாசினார். ஷாஹீன் அப்ரிடி 12 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்தார்.

MI எமிரேட்ஸ் தரப்பில் ரோஹித் கான் 3 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் பரூக்கி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

SHARE