ஐவர் சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலைக்கு தலைமை தாங்கியவரான கொஸ்கொட சுஜீயின் உதவியாளரான ‘சாமிக’ என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் வீட்டுக்குப் பின்னால் உள்ள கறுவாத்தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கியுடன் மகசீன் மற்றும் 32 தோட்டாக்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமை
இந்நிலையில் சந்தேகநபர் தொடர்பான விசாரணையின் போது, குறித்த துப்பாக்கியை கொஸ்கொட சுஜீ வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் 2008ஆம் ஆண்டு இலங்கை காலாட்படையில் இணைந்துகொண்டதாகவும், 2009ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபர் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு பெரிதும் அடிமையாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் செய்த குற்றங்கள் மற்றும் கொஸ்கொட சுஜீயின் குழுவினரால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக இந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய்வதற்காகவும், சந்தேகநபர் தன்னியக்க துப்பாக்கிகளை பயன்படுத்தி பயங்கரவாத தடைக்கான தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், அவர் 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதேவேளை, பெலியத்த ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் கார் ஒன்று தும்மலசூரிய பிரதேசத்தில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், கொலையாளிகள் பயணித்த பெஜிரோ ஜீப்பிற்கு போலி இலக்கத் தகடுகளை தயார் செய்த நபரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.