நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று (20.02.2024) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, யாழ். குடாநாட்டில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் வரை வசிக்கின்றனர்.
ஆளுநரின் பணிப்புரை
மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நயினாதீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக கடற்றொழில் காணப்படுகிறது.
அத்துடன், நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடலின்போது கிராம மக்களால் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் இதன் போது பணிப்புரை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி ஆணையாளரின் உறுதி
இதேவேளை, போக்குவரத்து மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்டவரைபை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய சந்திப்பின் போது கெளரவ ஆளுநரிகால் விடுக்கப்பட்ட பணிப்புரைகளை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் நயினாதீவு மக்களிடம் உறுதியளித்துள்ளார்.