இந்திய அரசா, தமிழக அரசா? யாரை நான் குற்றம் சொல்ல? நான் சாந்தன் பேசுகின்றேன்…

105

 

நான் சாந்தன் பேசுகின்றேன்!

ஆம் தாய்நாட்டையும் தாய்முகத்தையும் பார்க்காமலே விண்ணுலகம் சென்றேனே அந்த சாந்தன் பேசுகின்றேன்.

கைதாகி 33 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேனே அந்த சாந்தன் பேசுகின்றேன்.

ஈழத்தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா? ஈழத்தில் பிறந்தது ஒரு குற்றமா? இல்லை தமிழழகத்தை எங்கள் சகோதர நாடு என்று கருதியது ஒரு குற்றமா?

குடும்ப வாழ்வோ, தாய் பாசமோ, தாய் மண் வாசமோ அறியாமல் சிறைவாசத்தில் இறந்து போனேனே யாரை நான் குற்றம் சொல்ல?

சிறைவாசம் 33 ஆண்டு என்றால் தாய்நாட்டிற்கு வர ஒன்றரை வருட போராட்டம்.

சரி நான் தான் குற்றம் செய்தேன் என்றால் என் தாய் என்ன பாவம் செய்தாள்? முடியாத வயதிலும் ஒவ்வொரு படியாக நீதிமன்றம் ஏறினாளே ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கடிதம் எழுதினாளே அவள் கண்ணீருக்க என்ன பதில்?

33 வருடமாக விடை காணமுடியாக பிரச்சினை உள்ளதா?

இல்லை இதிலும் உங்களது அற்ப அரசியல் ஆசைக்கு என்னை தீனி போட்டுக் கொண்டீர்களா?

இந்திய அரசா, தமிழக அரசா? யாரை நான் குற்றம் சொல்ல?

இல்லை என் பெயர் சொல்லி அரசியல் செய்த அற்பர்களை குறை சொல்லவா? இனி குறை சொல்லியும் ஆக போவது ஒன்றுமில்லை. நீதி கேட்க அவனிடமே(இறைவனிடம்) செல்கின்றேன்.

எனினும் ஒரு சந்தோசம் என் உடல் தாய் மண்ணில் புதைக்கபடுவதில்,

என் தாய் உயிருடன் மகன் வருவான் என எதிர்பார்த்தால் எல்லோரையும் போல நானும் அவளை ஏமாற்றி விட்டேன் உடலாக வந்து….

அவள் கையால் ஒரு வாய் சாதம் சாப்பிடவாவது நான் எமனிடம் போராடியிருக்கலாம்.. அது சரி 33 வருட போராட்டமே ஜெயிக்கவில்லை இனியும் போராடுவதா என்று மீளா துயில் கொள்ள சென்று விட்டேன்.

அவள் என்ன பாடுபட்டாளோ தெரியாது எந்த தாய்க்கும் இந்த துயரம் வரவும் கூடாது.

இறுதியாக, ஒரு கோரிக்கை

இனி என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

என்னை போல இருக்கும் என்னுடன் இருந்த முருகன், ராபட் பயஸ், ஜெயக்குமார் அவர்களையாவது மீட்டுக்கொண்டு வாருங்கள். அவர்களையாவது குடும்பத்துடன் வாழ வையுங்கள்.

தாய் மண் வாசத்தையும் விடுதலை காற்றையும் சுவாசிக்க விடுங்கள்.

தாமதிக்கப்பட்ட நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது.

முதலும் கடைசி நானாகவே இருக்கிறேன்.

இப்படிக்கு சாந்தன்!

SHARE