இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம்! விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்.

342

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகின்றன.

இந்தநிலையில் முற்பகல் 9 மணிக்கே உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அரசாங்கத்தின் முதலாவது கொள்கை பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்பகல் 3 மணிக்கு உரையாற்றுவார்.

அவர், தமது உரையை சபாநாயகரின் ஆசனத்தில் இருந்து மேற்கொள்வார்.

இதேவேளை நாடாளுமன்ற அமர்வுகள் முற்பகல் 9.25 முதல் 9.30 வரை மணியோசை ஒலிக்க ஆரம்பமாகும். இதனையடுத்து 9.30க்கு உறுப்பினர்கள் ஆசனங்களில் அமர்வர்.

இந்தநிலையில் மணியோசை நிறுத்தப்பட படைக்கள சேவிதர், செங்கோலுடன் நாடாளுமன்றத்துக்குள் பிரசேவிப்பார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், செங்கோல் மேசையின் கீழ் உள்ள இடத்தில் வைக்கப்படும் வரை எழுந்து நிற்பர். இதனையடுத்த படைக்கள சேவிதர் தமது ஆசனத்தில் அமருவார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற செயலாளர், தேர்தலின் பின்னர் தமது அறிவிப்பை விடுப்பார்.

இதனையடுத்து நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 3 மற்றும் 4இன்படி சபாநாயகர் தெரிவுக்கான பெயரை பிரேரிப்பார்கள். பின்னர் அது ஆமோதிக்கப்படும்.

சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டவுடன். நாடாளுமன்ற செயலாளர் அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பார். இதன்போது சபாநாயகர், அவருடைய தெரிவுக்காக நன்றியை தெரிவிப்பார்.

பின்னர் அவர் ஆசனத்தில் அமர்ந்ததும்ää படைக்களசேவிதர், செங்கோலை மேசைக்கு கீழ் இருந்து எடுத்து மேசையின் மேல் வைப்பார்.

இந்தநிலையிலேயே சபாநாயகர், தமது சத்தியபிரமாணத்தை மேற்கொள்வார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகருக்கு பாராட்டு தெரிவிப்பர். அவரும் நன்றிக்கூறுவார்.

இதனையடுத்து சபாநாயகர் தமது பணிகளை ஆரம்பிப்பார். முதல் கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சத்தியபிரமாண கடதாசிகள் வழங்கப்பட்டு, அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் கையொப்பமிட்டு அவற்றை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பார்கள். அந்த சத்தியபிரமாணங்களில் நாடாளுமன்ற செயலாளரும் கையொப்பமிடுவார்.

இதன்பின்னர் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அத்துடன் குழுக்களின் பிரதிதலைவர் தெரிவும் இடம்பெறும். இவையாவும் சபாநாயகரின் தெரிவுப் போன்றே இடம்பெறும்.

இந்தநிலையில் நாடாளுமன்றம் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு 3 மணிக்கு ஜனாதிபதியின் உரை இடம்பெறும்.

இதனையடுத்து நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்படும்.

இதேவேளை நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் இன்றைய தினம் காலை முதல் மாலை வரையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை உறுப்பினர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக விசேட வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

SHARE