ஊடகவியலாளர்களின் கெளரவம், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று செயற்பட்ட அண்ணன் பாரதி!

107

 

அபு அலா
மிகவும் அமைதியான சுபாவத்தைக் கொண்ட மூத்த பத்திரிகை ஆசிரியர் அண்ணன் பாரதி இராஜநாயகம் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையளிப்பதாக திருகோணமலை மாவட்ட கோபாலபுரம் விவேக பார்வை ஊடக மையத்தின் தலைவர் எஸ்.எம்.முபீன் தனது அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஊடகவியலாளர்களின் கருத்துக்களில் இருக்கின்ற நியாயங்களை புரிந்து கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கியதுடன் ஊடகவியலாளர்களுக்கான கெளரவமும், பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற நன்நோக்கில் செயற்பட்ட ஒருவராகும்.
அமைதியான அணுகுமுறைகளையும் ஆழமான கருத்தியலையும் கொண்டிருந்த அண்ணன் பாரதி அவர்கள், ஊடக அறத்தின் வழிநின்று அனைத்து தரப்பினருடனும் மிக அன்பான உறவுகளை பேணியவராவார். குறிப்பாக ஊடகத்துறையில் மிக ஆழமான தடயங்களைப் பதித்துவிட்டு, தமிழ் ஊடகத்துறைக்கு பாரிய வெற்றிடத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.
அன்னாரின் இழப்பு, தமிழ் ஊடகத்துறைக்கு மட்டுமின்றி தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கும், மக்களுக்கும் பாரிய பேரிழப்பாக அமைந்துள்ளது.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விவேக ஊடக ஒன்றியம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
SHARE