எவண்ட்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது அரசியல் அமைப்புச் சபைக்கான சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பெயர்கள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
இதன் பின்னர் பிற்பகல் நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும், ஜே.வி.பி. தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க எவண்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பினார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது எவண்ட்கார்ட் ஆயுதக்களஞ்சிய விவகாரத்தில் வழக்குத் தொடர்வதற்கான சாட்சியங்கள் இல்லை என்று கூறி சட்டமா அதிபர் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, சட்டமா அதிபரை நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றின் முன்பாக விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.