வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களை ஜெனீவாவில் எல்லாத் தரப்புகளும் மறந்துவிட்டதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகிளனால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைகிறது. அந்த முஸ்லிம்கள் இன்னும் பல பகுதிகளில் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த முஸ்லிம்களின் துயர்துடைக்க என்னாலும், நான் வகித்த அமைச்சுப் பதவிகள் மூலமும் நடவடிக்கை மேற்கொண்டேன்.
வடக்கிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களையும் அவர்களது தாயகத்தில் மீளக்குடியேற காத்திரமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதில் தாமதிக்க கூடாது. இதற்கு சகல தரப்புகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்.
அதேவேளை நல்லாட்சியான இந்த அரசாங்கத்தில் வடக்கு முஸ்லிம்கள் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக எதிர்வரும் மாதம் கொழும்பில் மாபெரும் நிகழ்வொன்றையும் நடாத்துவது குறித்து பரிசீலித்து வருகிறேன். இதற்கு ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்டவர்களையும் அழைத்துவர ஏற்பாடு செய்து வருகிறேன்.
இப்போது ஜெனீவாவில் மனித உரிமைகள் குறித்த முக்கிய மாநாடு நடைபெறுகிறது. இதில் சிங்கள, தமிழ் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் பங்கேற்றுள்ளார்கள். சகலரும் தமது சமூகங்கள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேச எவரும் இல்லை. வடக்கிலிருந்து 2 மணிநேர அவகாசத்தில் இனச்சுத்திகரிப:பு செய்யப்பட்ட முஸ்லிம்கள் குறித்தும் அங்கு பேசப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி என்றவகையில் இதுகுறித்து உரிய தரப்பினரின் கவனத்தை ஈர்க்கவும், அந்த முஸ்லிம்களின் நலனுக்காகவும் என்னால் முடிந்த அத்தனை செயற்பாடுகளையும் துணிந்து மேற்கொள்வேன் எனவும் இதன்போது றிசாத் பதீயுதீன் ஆவேசமாக குறிப்பிட்டார்.