மன்னார் செல்வ நகர் பகுதியில் வைத்து அரச பேரூந்தின் மீது கல்வீசி தாக்குதல்: சாரதி மற்றும் யுவதி ஒருவர் காயம்

362
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து மன்னார் அரச போக்குவரத்துச் சேவைகள் இடை நிறுத்தப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் வழங்கிய உறுதிமொழியையடுத்து பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று  மாலை 5.30 மணியளவில் மன்னார் நோக்கி வருகை தந்த இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான பயணிகள் பேரூந்து இரவு 8 மணயிளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தை வந்தடைந்துள்ளது.

பின் பயணிகளை இறக்கிய நிலையில் குறித்த பேரூந்து மன்னார் டிப்போ நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த போது பேரூந்தின் சாரதி,நடத்துனர் மற்றும் சில பயணிகளும் பேரூந்தில் இருந்துள்ளனர்.

எழுத்தூர் செல்வநகர் கிராமம் ஊடாக சென்று கொண்டிருந்த குறித்த பேரூந்தை மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிக்கொண்டு வந்த சுமார் 10 பேர் கொண்ட குழு பேரூந்டை இடை நிறுத்தி கண் மூடித்தனமாக கற்களினால் வீசி தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் போது குறித்த பேரூந்தின் சாரதி மற்றும் குறித்த பேரூந்தில் பயணித்த யுவதி ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று புதன் கிழமை இரவு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸார் காயங்களுக்கு உள்ளான சாரதியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த தனியார் பேரூந்து ஒன்றின் சாரதியை கைது செய்தள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தனியார் பேரூந்தின் சாரதியை கைது செய்தமையினை கண்டித்து மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் இன்று  காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே வேளை தாக்குதலை மேற்கொண்ட ஏனையோரையும் கைது செய்யுமாறும்,தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் கோரி இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்டனர்.

உடனடியாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர்(2)ஜெய சேகர மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அரச மற்றும் தனியார் பேரூந்து சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இரு தரப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பொலிஸ் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை கைவிட்ட நிலையில் காலை 9 மணி முதல் வழமை போன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள மன்னார் தனியார் பேரூந்து சாரதியை விடுதலை செய்ய வேண்டும் எனவும், தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்யாது தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில்லாத ஒரு சாரதியை கைது செய்தள்ளதாகவும் இக் கைதை தாம் வண்மையாக கண்டிப்பதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

SHARE