
காவல்துறையினர் பாடசாலை மாணவரின் மனித உரிமையை மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொட்டாதெனிய பிரதேசத்தில் நான்கரை வயது சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த சந்தேகத்தின் பேரில் கம்பஹா மாவட்ட பிரபல பாடசாலை மாணவர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். 17 வயதான மாணவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவமானது பாரிய மனித உரிமை மீறலாகும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவர் முறைப்பாடு செய்தால் , கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
போதியளவு ஆதாரங்களுடன் சந்தேக நபர்களை கைது செய்வதில் எவ்வித பிழையும் கிடையாது என்ற போதிலும், சந்தேக நபர்களின் நன்மதிப்பிற்கு பாதகம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவரின் மடிக் கணனியில் ஆபாக வீடியோக்கள் காணப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டிருந்தால் நாட்டில் மேலும் பலரை கைது செய்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சர்வதேச சிறுவர் மற்றும் மனித உரிமைப் பிரகடனங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில் இலங்கையின் நன்மதிப்பை பாதிக்க ஏதுவாக அமையக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.