கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் 25ம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில் பலியானவர்களின் சடலங்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

346

 

கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் 25ம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில் பலியானவர்களின் சடலங்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

kotmale_bodies_007

பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் தோட்டமே முழு சோகமயமாக காணப்பட்ட நிலையில் இறந்தவர்களின் சடலங்கள், தோட்ட வாசிகசாலையிலிருந்து பிற்பகல் 3.20க்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 4.15 மணியளவில் பொதுமயானத்தில் கடும் மழையில் மத வழிபாடுகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அத்தோடு இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக பல மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்திருந்ததோடு, உறவுகளை பறிகொடுத்து விட்டோம் எனக் கதறி அழுததையும் தலையில் அடித்துக்கொண்டு மரண சடங்களில் கலந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

இறுதிச் சடங்கினை முறையாக செய்வதற்கு இத்தோட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் நேரங்காலம் பாராமல் ஈடுப்பட்டனர்.

காலநிலை கூட மந்த நிலையில் காணப்பட்டதோடு ஆங்காங்கே வெள்ளை கொடிகளும் பெணர்களும் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு மரணச் சடங்களில் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தமையால் மக்களை கட்டுப்படுத்துவதிலும் சிரமங்கள் காணப்பட்டதோடு, போக்குவரத்து ஸ்தம்பிதமானதோடு வாகனங்களை ஒதுக்குவதற்காக கொத்மலை பொலிஸாரும் ஈடுபட்டனர்.

இதேவேளை, மண்சரிவு அபாயத்தினால் குறித்த பகுதியில் உள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் இடம்பெயர்ந்து 26.09.2015 அன்று இறம்பொடை இந்து கல்லூரியில் தங்கவைக்கப்பட்டனர்.

எனினும் இதில் 17 குடும்பங்களை சேர்ந்தவர்களை குறித்த தோட்டத்தின் கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களை அவர்களின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம்,அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள், நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகள் முன்னெடுத்து வருகின்றன.

அத்தோடு, மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு சரிந்துவிழும் ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்த முனாமைத்துவ அதிகாரிகளால் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் இடங்களை இணங்கண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தொண்டமான் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு விரைவில் வீடுகளை கட்டி தருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு 27.09.2015 அன்று பிற்பகல் மரண சடங்குக்கு வருகை தந்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பிரத்தியோக செயலாளர் திஸ்ஸ குமார மற்றும் கொத்மலை இணைப்பாளர் ஜெயரட்ண ஏவகே தலைமையில் இறந்தவர்களின் உறவினர்களிடம் தலா 25000 ரூபா வீதம் மொத்தமாக 175000 ரூபா வழங்கப்பட்டது.

SHARE