ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் அமெரிக்கப்பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும். இலங்கை அரசும் பிரேரணையை ஆதரிப்பதால் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டிய அவசியம்-சுமந்திரன்

334

 

ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் அமெரிக்கப்பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும். இலங்கை அரசும் பிரேரணையை ஆதரிப்பதால் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

sumanthiran500

அமெரிக்கா புதிதாக ஒரு பிரேரணையை ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அப்பிரேரணை எதிர்வரும் 30 ஆம் திகதி பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் அமர்வுகளின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன்போது சில நாடுகளின் திருத்தங்களும் சமர்ப்பிக்கப்படலாம்.

அமெரிக்கா இந்தப் பிரேரணையை இரு தரப்பு இணக்கத்துடனேயே கொண்டு வந்ததாக ஜெனீவாத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை அரசின் சம்மதமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும் பிரேரணைக்கு கிடைத்துள்ளன. மேலும் பிரேரணை தயாரிக்கப்படும்போதே இரு தரப்பினரினதும் ஆலோசனை பெறப்பட்டதாகவும் இங்கு குறிப்பிடப்படுகின்றது.

அதனால் தான் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டவுடனேயே அதனை ஆதரிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முதலில் அறிவித்தது. அடுத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கப் பிரேரணையை ஆதரித்து அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமல்ல அமெரிக்கப்பிரேரணை தமக்குக்கிடைத்த வெற்றி என இரு தரப்பும் தனித்தனியாக குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜெனிவாவில் தங்கியிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் திடீரென நியுயோர்க் சென்றிருந்தார்.

அது குறித்து சுமந்திரன் குறிப்பிடுள்ளார்

முதலில் இலங்கை அரசு அமெரிக்காவின் பிரேரணையை எதிர்ப்பதாக அறிவித்தவுடனேயே நான் நியுயோர்க் வந்து விட்டேன். அமெரிக்காவின் ஐ.நா. ஜெனிவா பணிமனையின் பிரதான தூதுவராலயம் நியூயோர்க்கில் இருக்கின்றது.

அங்கு நான் கூட்டமைப்பின் நிலைமையை தெளிவு படுத்தினேன். அது குறித்து தாம் ஆலோசிப்பதாக தெரிவித்தனர். அதேநேரத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கையிலுள்ள சில வெளிநாட்டுத் தூதுவர்களையும் சந்தித்தார்.

புதிய பிரேரணையை நாம் வரவேற்கிறோம். இலங்கை அரசு இந்தப் பிரேரணையை ஏற்பதால் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டமாட்டாது.

இலங்கைக்கு ஆதரவான சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் பிரேரணைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வாய்ப்பே இல்லை.

இலங்கை அரசின் ஆதரவின்றி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானம் செயற்படுவது கடினமே.

எனவே இந்தத் தீர்மானம் அரசின் அனுமதியுடன் நிறைவேறுவதானால் சர்வதேச நீதியாளர் முன்னிலையில் விசாரணை நடைபெறுவது உறுதியாக உள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதன் மூலம் நியாயம் கிடைக்கும் என்றே நம்புகின்றோம் என்றும் அவர் தமது செவ்வியில் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டு தொடர்பாக அவர் சுவிஸின் தலைநகரான பேர்ன் நகரில் வெளியிட்ட கருத்து தொடர்பாக இச்செவ்வியின்போது தெளிவுபடுத்தினார்.

இனப்படுகொலை இடம்பெற்றதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அந்தக் குற்றச்சாட்டு சர்வதேசத்திடம் எடுத்துச் செல்லப்படும் போதிய ஆதாரங்கள் எம்மிடம் இருக்க வேண்டும் என்பதே என் ஆதங்கமாகும். ஆதாரமின்றி அதனை நாம் முன்னெடுக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE