மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர்: மக்கள் ஆர்ப்பாட்டம்- தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

290
ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. எனினும் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் மஸ்கெலியா பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்திலுள்ள தமிழ் பாடசாலையில் மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக என்ற குற்றச்சாட்டில் அந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவரை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் மஸ்கெலியா பொலிஸார் ஆஜர்ப்படுத்தினர்.

மொட்டிங்ஹேம் தோட்டத்திலுள்ள தமிழ் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் 4 மாணவிகளை குறித்த ஆசிரியர் தனியார் வகுப்பு என்ற போர்வையில் பல முறை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த 4 மாணவிகளும் பெற்றோர் ஊடாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபரான ஆசிரியர் 28.09.2015 அன்று மாலை கைது செய்யப்பட்டார்.

மேற்படி 4 மாணவிகளையும் பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனமற்றிருந்த பாடசாலை அதிபர், உப அதிபர் மற்றும் ஆசிரியர் குழாம் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பெற்றோரும், பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

தலவாக்கலை நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் 29.09.2015 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் 190 பேர் ஈடுப்பட்டனர்.

இத்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை வழங்கபடவில்லையென தெரிவித்தே வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களின் வீடுகளில் நடைபெறும் விசேட நிகழ்வுகளுக்கு வழமையாக தோட்ட நிர்வாகத்தால் விறகு வழங்கப்படுகின்றது.

கடந்த 20 ம் திகதி அன்று தோட்டத்தில் உள்ள ஒருவரின் குடும்ப தேவைக்காக விறகு வெட்டுவதற்காக தோட்ட வெளிகள உத்தியோகஸ்தர்க்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் மேற்படி அதிகாரியால் விறகு வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினை சேர்ந்தவர்கள் கடந்த 26 ம் திகதி விறகு வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது குறித்த தோட்ட வெளிகள அதிகாரி அவர்கள் தான் விறகு வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட வில்லையென  கூறி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அன்றைய தினம் பொலிஸ் அதிகாரிகள் தோட்டத்துக்கு சென்று விறகையும் கைப்பற்றியதுடன் சம்பந்தப்பட்ட நபரை தோட்ட நிர்வாகத்துக்கு 15000 ருபா வழங்குமாறு பொலிஸ் நிலையத்தில் வைத்து முடிவு செய்யப்பட்டது.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை.

பகல் உணவுக்கு தொழிலாளர்களை செல்லவிடாமல் கொழுந்து பறிக்குமாறு அதிகாரிகள் பணிப்பதாகவும் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பளம் உரிய நேரத்திற்கு வழங்கப்படாமல் அன்றைய தினம் தங்களின் தேவைகளை முடித்துக்கொண்டு தொழிலாளர்களை காக்கவைத்து இறுதிநேரத்தில் சம்பளம் வழங்குவதாக இவர்கள்  மேலும் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்ட தொழிலாளர்களின் வங்கிக்கு அனுப்பவேண்டிய கொடுப்பணவுகள் குறிப்பிட்ட திகதிகளில் அனுப்பப்படுவதில்லை இதனால் பல சிரமங்களை இவர்கள் எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான குறைப்பாடுகளை உடனடியாக தோட்ட நிர்வாகம் செய்யவேண்டுமென கோரியே 29.09.2015 அன்றைய தினம் மக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

SHARE