நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உண்மையை கண்டறிதல் முதன்மையானது – ரணில்

306
நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உண்மையை கண்டறிதல் முதன்மையானது – ரணில்

நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள உண்மையைக் கண்டறிதல் மிகவும் முதன்மையானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணகத்தை உருவாக்கும் முதல் படி உண்மையைக் கண்டறிதலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவருக்கேனும் எதிராக வழக்குத் தொடர்வதன் மூலம் இதனை செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவான முறையில் ஓர் பொறிமுறைமையை உருவாக்கி உண்மையைக் கண்டறிய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.மக்களின் ஆணைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் அந்த பொறிமுறைமை அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை உண்மை ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் எவ்வாறு மூண்டது? யார் உயிரிழந்தார்கள்? என்பது பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறிந்ததன் பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் அதனை செய்ய முடியாது அவ்வாறு வழக்குத் தொடர்ந்தாலும் அது தோல்வியிலேயே நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறிவதற்காக மூன்று நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலயம், குற்றச்சாட்டுக்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அவற்றை முன்கொண்டு செல்வதா என தீர்மானிக்கும் விசேட சட்டத்தரணி காரியாலயம் ஆகிய இரண்டும் உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டும் இலங்கையர்களின் தலைமையில் உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி காரியாலயத்தின் தீர்மானங்கள் உண்மை ஆணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்து உண்மைகள் கண்டறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை ஆணைக்குழுவிற்கு மதத் தலைவர்கள் ஆலோசனை அறிவுரைகளை வழங்குவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.வழக்குத் தொடரக் கூடிய காரணிகள் உண்டா என்பதனை உண்மை ஆணைக்குழு தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் பாராளுமன்றின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE