
தற்காலிகமாக தங்கியிருப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் நேற்றைய தினம் முதல் ஆரம்பித்துள்ளனர். நாட்டின் அனைத்து காவல்துறைப் பிரிவுகளிலும் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாகவும் அவ்வாறான சம்பவங்களை தவிர்க்கும் நோக்கிலும் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் எனத் தெரிவித்து காவல்துறை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழர்கள் பதிவுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருந்தனர்.
தற்போது, காவல்துறைப் பிரிவிற்குள் தற்காலிக அடிப்படையில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக வசிப்பாளர்கள் பதிவுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
அண்மைய நாட்களில் இடம்பெற்ற பாரிய பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்,கொலைகள் கொள்ளைகளுக்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வருபவர்கள், பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள், வழக்குத் தொடரப்பட்டவர்கள் வேறும் இடங்களுக்கு சென்று இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாதெனிய சிறுமி கொலை, பனாகொடை சிறுவன் கொலை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த விடயம் குறித்த காவல் நிலையத்திற்கோ பிரதேச மக்களுக்கோ தெரியாது என்ற காரணத்தினால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எதனையும் எடுக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அந்தந்த காவல் நிலையங்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக அடிப்படையில் தங்கியிருக்கும் அனைவரினது விபரங்களையும் பதிவுக்கு உட்படுத்தி விபரங்களை திரட்ட வேண்டுமென காவல்துறை தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.