விஜய், நயன்தாரா வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை

289

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “புலி’ படத்தின் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 35 இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இது குறித்த விவரம்:
நடிகர் விஜய் நடித்த “புலி’ திரைப்படம் வியாழக்கிழமை (அக்.1) வெளியாகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த பி.டி.செல்வக்குமார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபு தயமந்த் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து சுமார் ரூ. 100 கோடியில் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில், “புலி’ திரைப்படம் கருப்புப் பணம் மூலம் தயாரிக்கப்பட்டதாகவும், படத்தில் நடித்த நடிகர்கள், கலைஞர்களுக்கு ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை கருப்புப் பணமாக வழங்கப்பட்டதாகவும் வருமான வரித் துறைக்குப் புகார்கள் வந்தனவாம்.
அதே போல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, திரைப்படங்களுக்கு நிதி கொடுக்கும் மதுரை அன்புச்செழியன், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட சிலர் குறித்தும் புகார்கள் வந்தனவாம்.
இந்தப் புகார்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் ஆகிய ஊர்களில் 35 இடங்களில் ஒரே நேரத்தில் புதன்கிழமை காலை திடீர் சோதனை நடத்தினர்.
இதில் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீடு, அவருடைய நற்பணி மன்ற அலுவலகம், அடையாறில் உள்ள மற்றொரு வீடு, அலுவலகம், சாலிகிராமத்தில் உள்ள அவருடைய அலுவலகம், விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரனின் அடையாறு வீடு, சாலிகிராமம் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித் துறையினர் சோதனை செய்தனர்.
“புலி’ திரைப்படத்தை இயக்கிய சிம்புதேவன் வசிக்கும் கோடம்பாக்கம் லிபர்ட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வீடும் வருமான வரித் துறை சோதனைக்குத் தப்பவில்லை.
மேலும் திரைப்படத்தைத் தயாரித்தவர்களில் ஒருவரான பி.டி.செல்வக்குமாரின் சென்னை சாலிகிராமம் தேவராஜ்நகர் வ.உ.சி. தெருவில் உள்ள வீடு, கன்னியாகுமரி அஞ்சு கிராமத்தில் உள்ள வீடு ஆகியவற்றிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நயன்தாரா, சமந்தா: பல்லாவரம் சாரதி தெருவில் உள்ள நடிகை சமந்தா வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது படப்பிடிப்புக்காக சமந்தா வெளிநாடு சென்றிருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் சமந்தாவின் அடையாறு போர்ட் கிளப்பில் உள்ள வீடு, ஹைதராபாத் வீடு, அங்குள்ள அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல அடையாறில் உள்ள நடிகை நயன்தாராவின் வீடு, கொச்சியில் உள்ள அவரது வீடு, திருவனந்தபுரத்தில் உள்ள “புலி’ திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தமயந்த் வீடு ஆகியவற்றிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகாம்பாள்நகரில் வசிக்கும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் எஸ். தாணு வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மதுரை: திரைப்படத் தயாரிப்பாளர், நிதி நிறுவன உரிமையாளர் மதுரை கீரைத்துறை நல்லமுத்துப் பிள்ளை தெருவைச் சேர்ந்த அன்புச்செழியன் வீடு, மதுரை தெற்கு மாசிவீதியில் உள்ள அவர் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
“புலி’ திரைப்படத் தயாரிப்புக்கு, அன்புச்செழியன் நிதி உதவி செய்ததாகத் தெரிகிறது. அந்தத் தகவலின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், திரைப்படத்துக்கு நிதி உதவி செய்த மற்றொரு முக்கிய நபரான சென்னையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
400 பேர் குழு: சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் என தமிழகம், கேரளம், தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களில் 35 இடங்களில் இந்தச் சோதனையை வருமான வரித் துறையினர் நடத்தினர். இந்தச் சோதனைக்காக 400 வருமான வரித் துறை அதிகாரிகள், ஊழியர்கள் 35 குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு இடத்திலும் சோதனை நடத்தினர். வியாழக்கிழமை காலை வரை இந்தச் சோதனை நடைபெறும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையில் சில இடங்களில் இருந்து வரி ஏய்ப்பு தொடர்பான முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும், கணக்கில் வராத பல பவுன் தங்க நகைகள், கோடிக்கணக்கணக்கில் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவற்றின் முழு விவரங்களை வியாழக்கிழமை தெரிவிப்பதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
வருமான வரித் துறை சோதனை தொடர்பாக நடிகை சமந்தாவின் வீட்டுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நடிகை சமந்தா வீட்டில் வருமான வரித் துறை சோதனை குறித்த தகவலறிந்ததும், செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் பல்லாவரம் சாரதி தெருவில் உள்ள அவருடைய வீட்டுக்கு முன் குவிந்தனர்.
அவர்கள், சமந்தா வீட்டின் வாசல் முன் நின்று கொண்டு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்யும் காட்சியை புகைப்படம் எடுக்க முயன்றனர்.
அப்போது சமந்தா வீட்டுக்குள் இருந்து வந்த ஓர் இளைஞர் திடீரென செய்தியாளர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே சமந்தாவின் தந்தை ஜோசப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருப்புப் பணத்துக்கும் எனது மகள் சமந்தாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் சம்பந்தமும் இல்லை. வருமான வரியை சமந்தா முறையாகச் செலுத்தி வருகிறார். சமந்தா வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றார்.

SHARE