அரசாங்கம் பாரிய காட்டிக்கொடுப்பை மேற்கொண்டுள்ளது!– கலாநிதி குணதாச அமரசேகர

318
1815ல் நாட்டை காட்டிக் கொடுத்ததை விட தற்போதைய அரசாங்கம் பாரிய காட்டிக் கொடுப்பை செய்துள்ளதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய, கலாநிதி குணதாச அமரசேகர, சிங்கள பௌத்தர்களின் நிபந்தனைகள் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் இருந்த போதிலும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

நாடு சர்வதேசத்தை வெற்றிக்கொண்டுள்ளதாக சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்ட போதிலும் நாடு சர்வதேசத்திற்கு மத்தியில் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட யோசனையை ஏற்றுக்கொண்டன் மூலம் இந்த காட்டிக்கொடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் யோசனைக்கும் அமெரிக்காவின் யோசனைக்கு வித்தியாசங்கள் இல்லை.

அமெரிக்க யோசனையில் கலப்பு என்ற வார்த்தை உள்ளடக்கப்படவில்லை என்பது மாத்திரமே வித்தியாசம். அந்த வார்த்தை இல்லையொன்றாலும் செயற்பாடுகள் அதனடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.

இதனால், குறித்த செயற்பாட்டுக்கு எதிராக பேசிக்கொண்டிருப்பதில் மாத்திரம் பிரயோசனமில்லை. மக்கள் இணைந்து ஒரு முன்னணியாக போராட வேண்டும் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொங்கமுவே நாலக தேரர், உள்நாட்டு விசாரணை பொறிமுறையை அமைக்கும் யோசனைக்கு ஆதரவாக கைகளை உயர்த்த வேண்டாம் என நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன் இந்த பாரிய காட்டிக்கொடுப்புக்கு எதிராக மக்களை தெளிவுப்படுத்துமாறு பிக்குமாரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தர்ம உபதேசம், பூசை மற்றும் மத வழிப்பாட்டு நேரங்களில் இந்த செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லுமாறும் அவர் கேட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது போனால், பாழடைந்த வீட்டில் பாத்திரத்தை உடைப்பது போல், அரசாங்கம் தனது எண்ணப்படி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் பொங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE