இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் மீண்டும் உண்ணாவிரதம்

299
தமிழ்நாடு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் பத்துப் பேர் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு சிறப்பு பொலிசாரும் (கியூ பிராஞ்ச்), அரசும் தங்களை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே இவர்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

திருச்சி மற்றும் சென்னை சிறப்பு முகாம்களில் நேற்றுத் தொடக்கம் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் பத்துப் பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப முயற்சி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டவர்களாவர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய நால்வரும் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்று கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களை கடந்த செப்டம்பர் 30ம் திகதி சிறப்பு முகாம்களிலிருந்து விடுதலை செய்வதாக கியூ பிராஞ்ச் பொலிசாரும், தமிழ்நாடு அரசும் வாக்குறுதியளித்திருந்தனர். எனினும் குறித்த காலக்கெடு முடிவடைந்த நிலையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்தும், தம்மை சிறப்பு முகாம்களிலிருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE