இலங்கைப் பிரஜைகளின் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தை மீள நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க ஈடுபட்டுள்ளார்.
வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள பணத்தை எவ்வித கேள்விகளும் இன்றி நாட்டுக்குள் கொண்டு வர வசதி செய்து கொடுக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டில் முதலீடு செய்த பணத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், எவ்வித கேள்விகளும் கேட்கப்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே வர்த்தக வங்கிகள் மற்றும் மத்திய வங்கிக்கு வெளிநாட்டு முதலீடுகளை மீள்ப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்திலிருந்து முதலீடுகளை அகற்றிக்கொள்ளுமாறு கோரினால் அதனை டுபாய்கோ அல்லது சிங்கப்பூருக்கோ எடுத்துச்செல்லாது நாட்டுக்கு கொண்டு வருமாறு அவர் கோரியுள்ளார்.
இலங்கைப் புலம்பெயர் மக்கள் வெளிநாடுகளில் 10-15 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாகவும், எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் இதில் 2-3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்நாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.