“உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கும் வளலாயின் ஏனைய பகுதிகளில் டிசம்பருக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் மீள்குடியேறிய மக்களின் கோரிக்கைகளைப் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்,
வலிகாமம் கிழக்கு மக்கள் முன்னிலையில் தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட இடங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட இரா.சம்பந்தன், அங்குள் மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் உள்ள நெருக்கடிகள் பற்றிக் கேட்டறிந்துகொண்டார். இதன்போது அந்தப் பிரதேச மக்கள் தமது வாழ்விடத்தின் வெறுமையான பகுதியே விடுவிக்கப்பட்டுள்ளது என்றும், தொழில் மேற்கொள்ளளும் பகுதிகளான மயிலிட்டி மற்றும் தோட்டப்பகுதிகளான மிகுதி நிலப்பரப்புக்கள் இதுவரை விடுவிக்கப்படாத காரணத்தால் தாம் வாழ்வாதாரத்துக்கு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் மீளக்குடியேறிய பகுதிகளில் ஓலைக்குடிசைகளில் வாழ்வதால் வரவுள்ள மாரிகாலத்தை எண்ணி அச்சத்துடன் வாழ்வதாகவும், இதனால் தமக்கு வாழ்விடம், கழிப்பறை போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதிலும் குறிப்பாக நீங்கள் கோரிய உங்கள் கிராமத்தின் தொழில் வாய்ப்புக்கு ஏற்ற ஏனைய நிலப்பரப்புகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்” – என்றார். அதன் பின்னர் விடுக்கப்படவேண்டிய வளலாயின் ஏனைய நிலப்பரப்புகள், பலாலி, காங்கேசந்துறை போன்ற இடங்களை நேரில் சென்ற பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், மக்கள் வாழ்விடங்களில் படையினரால் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள், உல்லாச விடுதிகள் போன்றவற்றையும் பார்வையிட்டார். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் உடனிருந்தார்.