இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் குறித்து மக்கள் குழப்பமடையவேண்டிய அவசியம் கிடையாது. தமிழ் மக்களுக்கு சுபீட்சமானதும், கௌரவமானதுமான தீர்வினைப் பெற்றுக் கொள்ள இந்த தீர்மானம் வழியமைக்கும். அதனை நாம் சரியாய கையாளவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பேசிய சில விடயங்கள் எங்கள் மனங்களில் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக விரைவில் நான் முதலமைச்சருடன் நேரடியாக பேசுவேன். இந்தப் பேச்சுவார்த்தையில் சகல விடயங்களையும் பேசியதன் பின்னர், தமிழ் மக்களுடைய நலன்களுக்காக, நாங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுடன் செயலாற்றுவோம். எமக்கிடையில் முரண்பாடுகள் இருப்பதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த விடயத்தில் நாம் அமைதியாக இருந்தோம், இப்போதும் இருக்கின்றோம். என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார்.