இலங்கை விவகாரத்திற்காக பாரதீய ஜனதா கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகத் தயார் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றால், கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அந்தக் கூட்டணியில் ஏன் ராம்தாஸ் அங்கம் வகிக்கின்றார் எனவும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பிரச்சினையை வேறும் திசைக்கு திருப்பவே முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். தாம் பதவி விலகுவதனால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றால் அதில் எவ்வித தயக்கத்தையும் காட்டப் போவதில்லை என ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இனச் சுத்திகரிப்பு இடம்பெற்றதாக கூறப்படாவிட்டாலும், தமிழ் மக்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உள்ளானமை பற்றிய ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகளின் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்கு நியாயம் வழங்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.