பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை பூதாகாரமாக வெடிக்கக்கூடிய அபாய நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ஜி.ரி.என்)பிரதமரின் நடவடிக்கைகளுக்கு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை எனவும், எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமை சில காலங்களாக நீடித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுமை இழந்துள்ளார்.
பெரும்பாலும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் இருவருக்கும் இடையிலான முரண்பாடு பூதாகாரமாக வெடிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் அண்மையில் மேற்கொண்ட இரண்டு வெளிநாட்டு (இந்தியா, ஜப்பான்) விஜயங்களிலும் வெளிவிவகார அமைச்சின் ஒரு அதிகாரியையேனும் இணைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ஜி.ரி.என்)இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சிடமிருந்து பிரதமர் அறிக்கை ஒன்றை கோரியிருந்தார்.
சாதாரண தர மாணவர் ஒருவரினால் எழுதப்படும் அறிக்கை ஒன்றை விடவும் மோசமான தரத்தில் குறைந்த அறிக்கை ஒன்றே வெளிவிவகார அமைச்சிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமுற்ற பிரதமர், இந்திய விஜயத்தில் எந்தவொரு வெளிவிவகார அமைச்சு அதிகாரியையும் இணைத்துக்கொள்ளவில்லை.
ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவினாத ஆரியசிங்கவின் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் கடும் அதிருப்திஅடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது கள நிலவரங்களை அவ்வப்போது முன்னாள் ராஜதந்திரி ஒருவருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இரகசியமாக தொலைபேசி ஊடாக தகவல்களை வழங்கியிருந்தார் என ஆரியசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (ஜி.ரி.என்) ரவிநாத்ஆரியசிங்க மஹிந்த, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரின் மிக நெருங்கிய விசுவாசியும், முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்கவின் நெருங்கிய நண்பருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளினால் “ஆயா அம்மா” என அழைக்கப்படும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வரா பிரதமரின் உத்தரவிற்கு கட்டுப்படவில்லை என குற்றம் சுதம்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சட்ட உதவி பெற்றுக்கொள்ளல் குறித்த உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை என வகீஸ்வரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பின்னர் பிரதமரின் உத்தரவிற்கு அமைய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சுடன் தொலைதொடர்பு அமைச்சினையும் மங்கள சமரவீர கோரி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோரிக்கையை பிரதமர் நிராகரித்துள்ளதாகவும் இதனால் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொலைதொடர்பு அமைச்சின் ஊடாகவே மங்கள, தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கூறி தமக்கு மேலும் ஒர் அமைச்சுப் பதவியை மங்கள கோரியுள்ளார்.
எனினும், பிரதமர் அலுவலகம் அவ்வாறு எந்தவொரு மேலதிக பதவியையும் வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பிரதமருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாடுகள் எதுவும் கிடையாது என வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : கொலம்போ ரெலிகிராப்