இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக, 2015 செப்டம்பர் 16 அன்று இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவாகத்தின் விசாரணை அறிக்கையும், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முழுமை அறிக்கையும் வெளியிடப்பட்டது.

315

 

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக, 2015 செப்டம்பர் 16 அன்று இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவாகத்தின் விசாரணை அறிக்கையும், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முழுமை அறிக்கையும் வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போர் புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. தற்போதைய நிலை குறித்த சில பொதுவான கேள்விகளுக்கு விடை காண்போம்.

150914123214_mangala_samaraweera_geneva_640x360_bbc_nocredit

1. ஐநா மனித உரிமைப் பேரவையில் என்ன நடந்தது?

2015 செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் கூடிய ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைத் தொடர்பில் மூன்று விடயங்கள் நடந்தன. இலங்கையில் நடந்த பன்னாட்டு குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் நடத்திய விசாரணையின்268 பக்க அறிக்கை வெளியிடப்பட்டது (Report of the OHCHR Investigation on Sri Lanka). அந்த அறிக்கையை பேரவையில் முன்வைக்கும் வகையில் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முழுமை அறிக்கை 19 பக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டது (Comprehensive report of the Office of the United Nations High Commissioner for Human Rights on Sri Lanka).அதன் மீது விவாதம் நடத்தப்பட்டது (இந்த விவாதத்தில் கலந்துகொண்டு மருத்துவர் அன்புமணி இராமதாசு MP அவர்கள் பேசினார்).

இந்த அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த தீர்மானம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது (Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka, HRC 30/L.29). இந்த தீர்மானத்தை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டு முன்மொழிந்தது. இந்தியா உள்ளிட்ட 47 உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.

2. ஐநா விசாரணை அறிக்கையின் பின்னணி என்ன?

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த பன்னாட்டுக் குற்றங்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்று 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு ஏற்க மறுத்ததால், பன்னாட்டு விசாரணைக்கு 2014 ஆம் ஆண்டில் ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையிட்டது (HRC Resolution 25/L.1).அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு, ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின் விளைவே இந்த விசாரணை அறிக்கை ஆகும்.

ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தில் (OHCHR) ஏழு மனித உரிமை வல்லுநர் விசாரணைக்குழு உருவாக்கப்பட்டது (OHCHR investigating on Sri Lanka – OISL). இக்குழுவிற்கு மார்ட்டி அட்டிசாரி, சில்வியா கார்ட்ரைட்,அஸ்மா ஜஹாங்கீர் எனும் மூவர் ஆலோசகர்களாக செயல்பட்டனர். பதினோரு நாடுகளில் சாட்சிகளிடம் நேரில் விசாரணை நடத்தியும், புகார்களைப் பெற்றும், ஆவணங்களை ஆய்வு செய்தும் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது.

3. விசாரணைக் குழுவின் முக்கிய முடிவு என்ன?

இலங்கையில் பன்னாட்டு குற்றங்கள் நடந்தன என்பதை ஐநா விசாரணை சட்டபூர்வமாக நிரூபித்துள்ளது. போர்க்குற்றம்(war crimes),மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் (crimes against humanity), இனவெறுப்பு ரீதியிலான மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் (crime against humanity of persecution)இலங்கையில் நடந்துள்ளன என்று ஐநா விசாரணை அறிக்கை உறுதி செய்துள்ளது. இவற்றில் பெருமளவு குற்றங்கள் நிறுவனமயமாக்கப்பட்ட வகையில் அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளதை (system crimes) இந்த விசாரணை உறுதி செய்துள்ளது.

4. ஐநா விசாரணை ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

இலங்கைப் போரில் பன்னாட்டு குற்றங்கள் நடந்தன என்பதை இலங்கை அரசு வன்மையாக மறுத்துவந்தது. இதே கருத்தினை சீனா, கியூபா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் தொடர்ச்சியாக ஐநாவில் பேசி வந்தன.
இலங்கை அரசு பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி வெற்றிபெற்றுள்ளதாகவும், பயங்கரவாதிகளிடம் சிக்கியிருந்த அப்பாவி மக்களை மீட்டெடுக்கும் மீட்பு நடவடிக்கையை (humanitarian rescue operation) இலங்கை இராணுவம் மேற்கொண்டதாகவும் இந்த நாடுகள் கூறின. ஒரே ஒரு அப்பாவி உயிரும் பலியாகக் கூடாது என்கிற உன்னத நோக்கத்துடன்(zero civilian casualty policy)இந்த மீட்புப்போர் நடத்தப்பட்டதாக இந்த நாடுகள் கூறின.
இலங்கை அரசுக்கு எதிராகக் கூறப்படும் எல்லா குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்ற பொய்ப்பிரச்சாரம் என்றே இந்த நாடுகள் சாதித்தன.

இலங்கை அரசுக்கு ஆதரவான இத்தகைய மோசடிக் கருத்துகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஐநா மனித உரிமைகள் ஆணைய அறிக்கை. இலங்கை பன்னாட்டுக் குற்றமிழைத்த ஒரு நாடு என்பதை அதிகாரப்பூர்வமாக மெய்ப்பித்துள்ளது

5. டப்ளின் தீர்ப்பாயம், பிரேமன் தீர்ப்பாயம், தருஸ்மான் குழு, பெட்ரி குழு என பல அறிக்கைகள் ஏற்கனவே உள்ளன. அவற்றிலிருந்து இந்த அறிக்கை மாறுபட்டதா?

ஆமாம். இலங்கை குறித்து இதுவரை வெளிவந்த எல்லா அறிக்கைகளில் இருந்தும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக அறிக்கை மாறுபட்டது.

டப்ளின் தீர்ப்பாயம், பிரேமன் தீர்ப்பாயம் ஆகியன அரசுகள் சார்ந்த அமைப்பின் விசாரணை அல்ல. அவை அரசு சாராத தொண்டு அமைப்புகளின் (NGO) தன்னிச்சையான விசாரணை அறிக்கைகள் ஆகும். அவற்றுக்கு சட்ட ரீதியாக எந்த வலிமையும் இல்லை.

தருஸ்மான் குழு, பெட்ரி குழு – இவை இரண்டும் ஐநா பொதுச்செயலாளரால், அவருக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் ஆகும். இந்த அறிக்கைகள் ஐநா மனித உரிமைகள் பேரவையிலோ, ஐநா பாதுகாப்புச் சபையிலோ அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படவும் இல்லை. அவை பன்னாட்டு அதிகாரப்பூர்வ அவைகளில் விவாதிக்கப்படவும் இல்லை. அவற்றின் மீது ஐநா பொதுச்செயலர் எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கண்ட அனைத்து அறிக்கைகளில் இருந்தும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக அறிக்கை முற்றிலும் மாறுபட்டதாகும்.

இலங்கையில் நிகழ்ந்த பன்னாட்டு சட்டமீறல்கள் குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் மூலமாக உத்தரவிடப்பட்டு, இந்த அறிக்கை கொண்டுவரப்பட்டது.

ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை (HRC/30/CRP.2), ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை (HRC/30/61) என இரண்டு ஆவணங்கள் இதில் உள்ளன. இவை இரண்டிலும் பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் செப்டம்பர்30 அன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீது விவாதமும் நடத்தப்பட்டது.இந்த பரிந்துரைகளை ஓரளவுக்கு பின்பற்றி அக்டோபர் 1 அன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானமும் (HRC/30/L.29) நிறைவேற்றப்பட்டது.

ஆகவே, ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கைதான், ஈழத்தமிழர் நீதிக்கான பயணத்தில் சர்வதேச அளவிலான முதல் படி என்று கொள்ளலாம்.

6. ஐநா விசாரணை அறிக்கையில் இனப்படுகொலையை குறிப்பிடவில்லை என்கிறார்களே?

ஐநா விசாரணை அறிக்கையில் இனப்படுகொலை (Genocide) நடந்ததாகக் குறிப்பிடவில்லை என்பது உண்மைதான். ஆனால், இனப்படுகொலை நடந்திருக்கலாம் என்பதை இந்த அறிக்கையின் எந்த இடத்திலும் மறுக்கவும் இல்லை.

பன்னாட்டுக் குற்றங்கள் தொடர்பாக மிகத்தவறான மூடநம்பிக்கை தமிழ்நாட்டில் நிலவுகிறது. போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பன சாதாரணமானவை போன்றும், இனப்படுகொலை மட்டும்தான் தீவிரமானது என்பதாகவும் கற்பிதங்கள் நிலவுகின்றன.இவை தவறான பரப்புரை மட்டுமல்ல, இலங்கையில் நடந்த குற்றங்களை குறைத்து மதிப்பிடும் போக்கிலானவையும் கூட.

பன்னாட்டு குற்றங்கள் அனைத்தும் மிக மோசமான குற்றங்கள்தான். இவற்றில் ஒரு குற்றம் மிக மோசமானது,மற்றொரு குற்றம் சாதாரணமானது என்று பன்னாட்டு சட்டத்தில் இல்லை. பன்னாட்டு சட்டங்களின் கீழ், போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை – இவை மூன்றுமே மிகக்கொடூரமான குற்றங்கள்தான். இவை மூன்றுக்குமே கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

ஒரே குற்ற நிகழ்வை ‘போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை’ ஆகிய மூன்று விதமாகவும் குற்றம் சாட்டமுடியும். பன்னாட்டு சட்டங்களின் கீழ் போர்க்குற்றம் என்பதை எளிதாக நிரூபிக்க முடியும். மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்று நிரூபிப்பது கடினமானது.இனப்படுகொலை என்று நிரூபிப்பது மிகக் கடினமானது.

போர்க்குற்றம்,மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகிய இரண்டும் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் நிரூபிக்கக் கூடியன. ஆனால், இனப்படுகொலை என்பதை நிரூபிக்க – ‘ஒரு இனத்தை அழிப்பதற்கான மனம் சார்ந்த உள்நோக்கத்தை’ (genocidal intent) நிரூபித்தாக வேண்டும். இலங்கை அரசின் இத்தகைய மன நோக்கத்தை முழுமையான குற்றவியல் நீதிவிசாரணை மூலமாக மட்டுமே நிரூபிக்க முடியும் என்பதால், ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணையில் இனப்படுகொலை நடந்ததாக குறிப்பிடப்படவில்லை.

அதே நேரத்தில்,முழுமையான நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டால், இனப்படுகொலை உறுதிசெய்யப்பட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களும், தற்போதைய ஐநா மனித உரிமைகள் ஆணையர் செயீத் ராத் அல் ஹுசைன் அவர்களும் விளக்கம் அளித்துள்ளனர்.

ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கையில் பன்னாட்டு குற்றங்கள் நடந்தன என்பது மட்டுமல்லாமல், இக்குற்றங்கள் நிறுவனமயமாக்கப்பட்ட வகையில் அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக (system crimes) கூறப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஆகும்.

7. ஐநா விசாரணை ஒரு குற்றவியல் விசாரணை அல்ல என்று கூறப்படுகிறதே?

ஆமாம். ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை குற்றவியல் விசாரணையும் (criminal investigation)அல்ல, நீதிமன்ற விசாரணையும் (Judicial Trial) அல்ல. பன்னாட்டு சட்டவல்லுநர்கள் இதனை உண்மை அறியும் பணி (Fact-work) என்று கூறுகின்றனர்.

ருவாண்டா,போஸ்னியா, சூடான், கம்போடியா போன்ற பன்னாட்டு குற்றங்கள் நடந்த அனைத்து நாடுகளிலும் முதலில் இதே போன்ற பன்னாட்டு விசாரணை ஆணையங்கள் (Commission of Inquiry) அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

பன்னாட்டு விசாரணை ஆணையம் என்பது தனிமனித குற்றங்களை நிரூபிக்க முயற்சிக்காது, மாறாக, அரசின் குற்றங்களை விசாரிக்கும். இந்த விசாரணை சில மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும். பன்னாட்டு விசாரணை ஆணைய விசாரணையின் போது குற்றங்கள் மற்றும் விதிமீறல்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் நம்பத்தகுந்த அளவில் இருந்தாலே போதும் (reasonable grounds to believe). விசாரணையின் முடிவில் யாருக்கும் தண்டனை வழங்கப்படாது. மாறாக, பரிந்துரைகளை அளிக்கப்படும். இதுதான் இலங்கை விடயத்தில் இப்போது நடந்துள்ளது.

ஆனால் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் (International criminal tribunal)என்பது அரசின் குற்றங்களை விசாரிக்காது. மாறாக, தனிமனித குற்றங்களை விசாரிக்கும். இந்த விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும். பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாய விசாரணையின் போது குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்(beyond reasonable doubt).விசாரணையின் முடிவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

இலங்கை மீதான ஐநா பன்னாட்டு விசாரணை ஆணையத்தின் மூலம் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக சர்வதேசமும் இலங்கையும் இணைந்த ‘கலப்பு’ குற்றவியல் தீர்ப்பாயம்(hybrid tribunal)அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

8. ஐநா விசாரணையின் பரிந்துரைகள் போதுமானவையா?

ஐநா விசாரணையின் பரிந்துரைகள் போதுமானவை அல்ல. ஆனாலும் வரவேற்கத்தக்கவை.

ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையும், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையும்- இலங்கையில் நிகழ்ந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையின் தேவையை உறுதி செய்கின்றன.மிகக் கொடூரமான பன்னாட்டு குற்றங்கள் நிகழ்ந்த பின்னர், அவற்றை விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது பன்னாட்டு சட்டங்களின் கீழ் உலக நாடுகளின் கடமை.

எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் நீதிமன்றமே பன்னாட்டு சட்டங்களின் கீழ் நம்பத்தகுந்த வகையில் விசாரித்து நியாயமான நீதியை வழங்க வேண்டும் என்பதுதான் பன்னாட்டு சட்டம் கூறும் நடைமுறையாகும். ஒருவேளை அந்த நாட்டில் நிலவும் சூழலும், நீதித்துறையின் பலவீனமான நிலையும் பன்னாட்டு சட்டங்களை கையாளும் அளவில் இல்லை என்றால், பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறை மூலமாக குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். இதனை உலகநாடுகள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக,ஐநா அவை மூலமாக இதனை உறுதி செய்ய வேண்டும் என்பது கட்டாயமான தேவை ஆகும்.

இலங்கையில் நடந்தக் குற்றங்களையும் அதற்கு காரணமான இலங்கை அரசையும் விவரிக்கும் போது, ஒரு பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையே தேவை என்பதற்கான காரணங்கள் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் உள்ளன. ஆனால், பரிந்துரை என்று வரும்போது ‘இலங்கை தன்னைத்தானே விசாரிக்கும் தகுதி வாய்ந்ததாக இல்லை’ என்றும், இலங்கை அரசே குற்றவாளியாக இருப்பதால் ‘உள்நாட்டு விசாரணைக்கு மேலான ஒரு கலப்பு விசாரணை பொறிமுறை வேண்டும்’ (it will require more than a domestic mechanism)என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

பன்னாட்டு குற்றவியல் விசாரணைக்கு வழிவகுக்கும் ரோம் உடன்படிக்கையில் இலங்கை அரசு கையொப்பமிடாததால்,அதன் மீது நேரடியாக பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட முடியாது. அத்தகைய ஒரு விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் ஐநா பாதுகாப்புச் சபைக்கும் ஐநா பொதுச்சபைக்கும் மட்டுமே உண்டு.ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அந்த அதிகாரம் இல்லை.

ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கை மீது பன்னாட்டு விசாரணையை எதிர்க்கும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்துடன் (ஒரே வாக்கில் தோற்கடிக்கும் அதிகாரம்) இருப்பதால், இலங்கை மீது பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இல்லை எனக்கருதி ‘கலப்பு விசாரணை வேண்டும்’ என்கிற முடிவுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையர் வந்திருக்கக் கூடும்!

அத்தகைய கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசின் ஒப்புதலுடன், அந்த நாடு கையொப்பமிடும் உடன்படிக்கை மூலமாகத்தான் உருவாக்க முடியும் என்பது கூடுதல் செய்தியாகும்!

9. ஐநா மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டனவா?

ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையின் பரிந்துரைகள் ஆகியனவற்றில் பெரும்பாலான பரிந்துரைகள், ஐநா மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மிக முக்கியமான பரிந்துரையான”கலப்பு நீதிவிசாரணைப் பொறிமுறை” இந்தத் தீர்மானத்தில் (HRC/30/L.29) இடம்பெறவில்லை.

‘இலங்கை தன்னைத்தானே விசாரிக்கும் தகுதி வாய்ந்ததாக இல்லை’ எனவே, ‘உள்நாட்டு விசாரணைக்கு மேலான ஒரு கலப்பு விசாரணை பொறிமுறை வேண்டும்’ என்று ஐநா மனித உரிமை ஆணையர் பரிந்துரை செய்த பின்னரும் – உள்நாட்டு விசாரணைக்கு வழிகோரும் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

அதே நேரத்தில் இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் காமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள்,வழக்குறைஞர்கள், புலனாய்வாளர்கள் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது ஒரு’உள்நாட்டு நீதிவிசாரணையாக மட்டுமே இருக்கும்’ என்று இலங்கை அரசும், இது ஒரு ‘கலப்பு நீதிவிசாரணைப் பொறிமுறையாகத்தான் இருக்கும்’ என்று பன்னாட்டு பார்வையாளர்களும் குறிப்பிடுகின்றனர்.(பன்னாட்டு பங்களிப்புடன் கூடிய உள்நாட்டு நீதிமன்றம் என்று கூறப்பட்ட கம்போடியாவில், ‘கலப்பு நீதிமன்ற பொறிமுறைதான்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.)

தீர்மானத்தின் வார்த்தைப் பயன்பாடு மிகப் பலவீனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் சார்பில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை “வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம், ஊக்கப்படுத்துகிறோம்”(Welcomes, Supports, Encourages) என்கிற அளவிலான வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எந்த இடத்திலும் இலங்கை அரசுக்கு உத்தரவிடும் வகையிலான வார்த்தைகள் இடம்பெறவில்லை. இந்த தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் தீர்மான வார்த்தைகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதே நேரத்தில்,தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இருப்பதால், சட்டபூர்வமான பன்னாட்டு உடன்படிக்கைக்கு இருக்கும் வலிமை இந்த தீர்மானத்துக்கும் இருப்பதாக கருதப்படுகிறது.அதாவது, தானே முன்வைத்த விசாரணைத் தீர்மானத்தை குற்றவாளி நாடு தானே மீற முடியாது என்கிற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது!

10. ஐநா தீர்மானத்தின் வரவேற்கத்தக்க அம்சம் என்ன?

ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள், ஐநா மனித உரிமைகள் ஆணையர் முழுமை அறிக்கையின் பரிந்துரைகள், மற்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் ஆகியவற்றில் மிக முக்கிய மையக் கருத்தாக கூறப்பட்டிருப்பது “நிலைமாற்றுக்கால நீதி”(transitional justice)என்பதாகும்.

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை, நிரந்தர அரசியல் தீர்வுக்காக உலக ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு, தற்போதும் தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு உடனடி முற்றுப்புள்ளி – ஆகியனவே தமிழர்களின் பொதுவான கோரிக்கையாக இருந்தது.இந்தக் கோரிக்கைகளின் பெரும்பாலானவற்றை நிறைவேற்றும் வகையில் ‘நிலைமாற்றுக்கால நீதி’உள்ளது.

இலங்கையில் தனிநாடு கோருவதற்கான நேரடி வாய்ப்பு நீங்கலாக, தமிழ் மக்களின் பெரும்பாலான சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இரண்டாவது தீர்வு எனக் கருதக் கூடிய அளவில், ‘நிலைமாற்றுக்கால நீதி’ என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதனை புதிய தீர்மானம் வலியுறுத்துகிறது.

11. ‘நிலைமாற்றுக்கால நீதி’ என்றால் என்ன?

மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடந்த நாடுகளில், அந்தக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை அங்கீகரித்து, குற்றவாளிகளைத் தண்டித்து, பாதிப்புகளுக்கு பரிகாரம் கண்டு, மீளவும் குற்றம் நடக்காதவாறு சீரமைப்புகளை செய்து அமைதிக்கு திரும்பும் வழிமுறை ‘நிலைமாற்றுக்கால நீதி’ ஆகும்.

இந்த நடைமுறையில் மிக முதன்மையான நான்கு அங்கங்கள் உள்ளன. 1. உண்மையை வெளிக்கொணர்தல், 2. குற்றவாளிகளைத் தண்டித்தல், 3. இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல், 4. குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அமைப்புகளை மாற்றுதல் – ஆகியனவே நிலைமாற்றுக்கால நீதியின் முதன்மையான அடிப்படை வழிமுறைகள் ஆகும்.

இந்த நான்கு வழிகளும் ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்ப்பவை. எனவே, ஒன்றைச் செய்துவிட்டு, மற்றொன்றைக் கைவிடுவது ஏற்புடையது அல்ல. மாறாக, இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். ‘நிலைமாற்றுக்கால நீதி’ முறையில் பாதிக்கப்பட்ட மக்களே மிக முதன்மையான அங்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முதன்மையானதாகும்.

1. உண்மையை வெளிக்கொணர்தல் (Truth): ஈழப் போரின் காலத்திலும்,அது தொடர்பான கடந்து 30 ஆண்டுகளாக என்ன நடந்தது என்பதை – உள்ளது உள்ளபடி உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். குற்றம் செய்தோரை தண்டிக்கவும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நேராமல் தடுக்கவும் உண்மையை வெளிக்கொணர்தல் அவசியமாகிறது. இவ்வாறு உண்மையை வெளிக்கொண்டுவருவது ஐநா தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2. குற்றவாளிகளைத் தண்டித்தல் (Criminal prosecutions):நியாயமான நீதிமன்ற பொறிமுறை மூலம் குற்றங்களை கண்டறிந்து விசாரிப்பதும் குற்றவாளிகளைத் தண்டிப்பதும் கட்டாயமாகும். இத்தகையை ஒரு பொறிமுறை ஐநா தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

3. இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல் (Reparations): பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் செய்தல் அமைதிக்கான முக்கிய வழியாகும். பொருளாதார ரீதியிலும், அரசின் குற்றங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டும், பாதிப்புகளை ஆவணப்படுத்தி அருங்காட்சியங்களாக மாற்றுவதன் மூலமாகவும் பலவழிகளில் பரிகாரம் தேடும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இதற்கான வழிமுறைகள் ஐநா தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

4. குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அமைப்புகளை மாற்றுதல் (Institutional reform):அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உள்நாட்டு சட்டங்களையும் மாற்றுதல். அரசாங்கம், காவல்துறை,இராணுவ அமைப்புகளில் மாற்றங்களை கொண்டுவருதல். குற்றத்துடன் தொடர்புடையோரை அரசுப்பணிகளில் இருந்தும் அதிகாரப்பதவிகளில் இருந்தும் நீக்குதல் உள்ளிட்டவை ஆகும். இதற்கான வழிமுறைகள் ஐநா தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

– உலகெங்கும் உள்நாட்டு போர்களுக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்களில் ஐநா அவையின் பங்களிப்பினால் பெற்ற படிப்பினைகளைக் கொண்டு ‘நிலைமாற்றுக்கால நீதி’ முறையை ஐநா அவை முன்வைத்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் ‘நிலைமாற்றுக்கால நீதிக்கான சிறப்புத் தூதர் பாப்லோ டி க்ரீஃப் 2015 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு ஆய்வுப்பயணம் மேற்கொண்டார். அவரது அறிக்கையில், ‘நிலைமாற்றுக்கால நீதி முறையை பின்பற்றினால் இலங்கையில் அமைதித் தீர்வு எட்டப்படுவதுடன்,உலகின் மற்ற நாடுகளுக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைய முடியும். ஆனால், அதற்கு மேல்பூச்சு வேலைகள் போதுமானது இல்லை. முழுமையான மாற்றம் தேவை.

உள்நாட்டு விசாரணையா அல்லது பன்னாட்டு விசாரணையா என்பது முக்கியமில்லை, அதற்கு மாறாக அந்த விசாரணையானது பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். கூடவே,மிகப்பெருமளவில் நிகழ்ந்துள்ள கொடும் குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு வலிமையானதாக இருக்க வேண்டும். இவை இரண்டும்தான் முக்கியம்’ என்று அவர் வலியுறுத்தினார்.
ஐநா தீர்மானத்திலும் முழுமையான ஒரு நிலைமாற்றுக்கால நீதிப் பொறிமுறையே (transitional justice mechanism) வலியுறுத்தப்பட்டுள்ளது.

இனி என்ன?

ஐநா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள எதையும், வழங்கப்பட்டுள்ள 18 மாத காலத்தில் இலங்கை அரசு நிறைவேற்றாது.அதற்கான உள்ளார்ந்த விருப்பம் இலங்கை அரசுக்கு இல்லை. அதே நேரத்தில், இலங்கையில் நடந்த கொடும் குற்றங்களை ஐநா மனித உரிமைகள் ஆணைய விசாரணை நிரூபித்துள்ளதால், இனியும் நீதியின் கைகளில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது.

இலங்கை அரசின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் (Should there be insufficient progress, the Human Rights Council should consider further international action to ensure accountability for international crimes)என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ராத் அல் ஹுசைன் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை தொடர்புடைய எல்லோரும் கண்காணிக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான தேவை ஆகும்.

தீர்மானத்தை இலங்கை நடைமுறைப் படுத்துகிறதா என்பதை மதிப்பிடுவதற்காக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட இருக்கிறார். முன்று மாதங்களுக்கு ஒருமுறை,ஒவ்வொரு முறையும் இரண்டுவார கால வீதம் தூதுக்குழு ஒன்று இலங்கையில் பார்வையிட இருக்கிறது.

தீர்மானத்தின் படி, ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2016 ஜூன் மாதத்தில் வாய்மூல அறிக்கையையும்,2017 மார்ச் மாதத்தில் முழுமையான அறிக்கையையும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் சமர்ப்பிக்கவுள்ளார்.அப்போது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.

உலகின் பல நாடுகள் கண்காணிப்பு திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றன. ஜப்பான் நாட்டின் சார்பில் கம்போடியாவில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஒருவர் இலங்கைக்கு அனுப்பப்பட இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.

தமிழ்நாட்டு மக்களின் கடமை என்ன?

ஐநா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள நிலைமாற்றுக்கால நீதிப் பொறிமுறையை (Transitional Justice mechanism) இலங்கை அரசு நிறைவேற்றுகிறதா என்று இந்திய அரசு கண்காணிக்க வேண்டும். இவ்வாறான கண்காணிப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி,இலங்கையின் நடவடிக்கைகளை ஒளிவு மறைவின்றி பன்னாட்டு சமூகத்திடம் இந்திய அரசு முன்வைக்க வேண்டும்.

ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ‘இலங்கை அரசின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூக முன்னெடுக்க வேண்டும்’ என்கிற ஐநா மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரையை இந்திய அரசே முன்னெடுத்து, ஐநா மனித உரிமைகள் பேரவையிலும், ஐநா பாதுகாப்பு அவையிலும் ‘பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறைக்கான (International Judicial Tribunal/International Criminal Prosecution) தீர்மானத்தை’ இந்திய அரசே முன் வைக்க வேண்டும்.

இத்தகைய ஒரு நடைமுறைக்கு இந்திய அரசை உடன்பட வைப்பதே, ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியக் குடிமக்களான தமிழ்நாட்டு தமிழர்களின் தலையாயக் கடமை ஆகும்.

அதாவது,எங்கோ இருக்கும் அமெரிக்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அமெரிக்கக் கொடியை எரிப்பது தமிழ்நாட்டு தமிழர்களின் வேலை அல்ல. மாறாக, தாம் வாக்களித்து தேர்வு செய்யும் இந்திய அரசாங்கத்தை தமது குரலுக்கு செவி சாய்க்கச் செய்வதே தமிழ்நாட்டுத்தமிழர்களின் கடமை ஆகும்.

SHARE