ஜெனிவா பிரச்சினையை சமாளிக்கவே தேசிய அரசாங்கம்: டிலான் பெரேரா – மகிந்தவின் காலம் இருண்ட காலம்: பைஸர் முஸ்தபா

309
ஜெனிவா பிரச்சினை போன்ற சர்வதேச சவால்களை எதிர்கொள்ளவே நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இணக்க அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளதாக பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அதன் வெற்றியை காணமுடிகிறது எனவும் ஜெனிவா யோசனையின் முதல் கட்டத்தில் சர்வதேச விசாரணை கோரப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் உள்நாட்டு பொறிமுறையாக அது மாற்றம் கண்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டிலான் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பற்றுடன் நடந்து கொள்வதுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பற்றுடன் நடந்து கொள்கின்றன.

இதனால், இலங்கையின் தற்போதைய தேசிய அரசாங்கத்திற்கு எந்த பேதங்களும் இன்றி சர்வதேசத்தின் ஆதரவு கிடைத்துள்ளது.

உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணைகளுக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்க வெளிநாட்டு பிரதிநிதிகள் வருவார்கள். இது மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் நடந்தது.

திஸ்ஸ விதாரண, டியூ. குணசேகர போன்ற இடதுசாரி தலைவர்கள் தற்போது விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெறும் மாநாடுகளுக்கு சென்று பொய்யான நிலைப்பாடுகளை பரப்பி, இனவாதத்திற்கு உந்து சக்தியை கொடுத்து கரகோஷம் போடும் நிலைமைக்கு சென்றுள்ளதை காண முடிகிறது.

எவ்வாறாயினும் ஜெனிவா யோசனை சம்பந்தமாக தெளிவான நிலைப்பாட்டில் இருப்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பைஸர் முஸ்தபா,

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலம் ஒரு இருண்ட காலமாக இருந்தது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகாமல் போயிருந்தால், ஜெனிவா யோசனை இதனை விட பல மடங்கு பாரதூரமானதாக இருந்திருக்கும் எனவும் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

பைஸர் முஸ்தபா கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றினார் என்பதால், அந்த இருண்ட காலத்திற்கு அவரும் மகிந்த ராஜபக்சவுக்கு உதவினார் தானே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் முஸ்தபா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிக சிறிய தரப்பினரின் தீர்மானங்களுக்கு தாம் உட்பட பலர் தலையாட்ட நேர்ந்ததாக கூறியுள்ளார்.

SHARE