காய்ச்சல், சளி, இருமலை தணிக்க கூடியதும், சர்க்கரையின் அளவை குறைக்க வல்லதும், அஜீரண கோளாறுகளை போக்க கூடியதும், தோல் நோய்களை சரிசெய்யும் தன்மை கொண்டது வனதுளசி. வன துளசிக்கு ‘காட்டு துளசி’ என்ற பெயர் உண்டு. துளசியை போன்ற மணம் உடையது. துளசியின் தன்மைகளை கொண்டது. இதன் சாறு உள் உறுப்புகளை தூண்டக்கூடியது. இதன் மணம் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது.
வனதுளசி கொசுவர்த்திகளில் சேர்க்க கூடியது. சோப்பு கட்டிகளில் இதை சேர்க்கிறார்கள். இதன் சாறு வயிற்று கோளாறுக்கு மருந்தாகிறது. மேல்பூச்சாக பூசினால் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும். நுண்கிருமிகள், நோய் கிருமிகளை தடுக்க கூடியது. சிறுநீரை பெருக்க வல்லது. சர்க்கரை நோயை தணிப்பதாக அமைகிறது. சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது.
வனதுளசியை ‘நாய் துளசி’ என்றும் கூறுவார்கள்.
வனதுளசி விதைகளை கொண்டு பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபோக்கு மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான தேனீர் தயாரிக்கலாம்.ஒரு வேளைக்கு துளசி விதைகளை 10 முதல் 30 கிராம் எடுத்துகொள்ளவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி வடிக்கட்டி, பால் சேர்த்து குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்க தேவையில்லை. இதை குடிப்பதன்மூலம் வெள்ளைப்படுதல் சரியாகும். கருப்பை மற்றும் கருக்குழாயில் ஏற்படும் புண் குணமாகும். சர்க்கரை நோயை தணிக்கும்.
காட்டு துளசி இலையை பயன்படுத்தி ஜுரம், சளி, இருமலுக்கான உள்மருந்து தயாரிக்கலாம். ஒரு டம்ளர் கசாயத்துக்கு ஒரு கைப்பிடி அளவு இலை, ஒரு ஏலக்காய், சிறிது பனங்கற்கண்டு, 2 லவங்கம் எடுத்துக்கொண்டு நீர்விட்டு காய்ச்சி, அதை வடிக்கட்டி குடிக்கவும். குழந்தைகளுக்கு மாந்தம் ஏற்பட்டு சரியாக சாப்பிடாமல் இருந்தாலும், சளி அதிகமாக இருந்தாலும் குணமாகும். குழந்தைகளுக்கு காலை, மாலையில் 20 மி.லி., பெரியவர்கள் 50 மி.லி. வரை எடுத்துக்கொள்ளலாம்.
மெல்லிய ஊதா நிற பூக்களை உடைய வனதுளசியின் காய்கள், இலைகள் மருந்தாகிறது. இலைகளை சாறு எடுத்து குடிக்கும்போது சளி கரையும். நெஞ்சக சளியை சரிசெய்யும். வியர்வையை பெருக்கி காய்ச்சலை தணிக்கிறது. உடல் உஷ்ணத்தை குறைக்கும். வயிற்றில் இருக்கும் காற்றை வெளித்தள்ள கூடியது. வயிற்று புண்களை ஆற்றும். கிருமிகளை வெளியேற்றும். குழந்தைகளுக்கு சளி, பசியின்மை, வயிற்றுபோக்கை தணிக்கும்.
வனதுளசி இலைகளை பயன்படுத்தி தோல் நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு இலை பசையுடன், 2 பங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்ச வேண்டும். இது, பூஞ்சை காளான்களை போக்கும் மேல்பூச்சாகிறது. நுண்கிருமிகளால் தோல் பாதிக்காவண்ணம் தடுக்கிறது. நோய்கிருமிகளை தடுக்க கூடியது. நீர் கசிவுடன் ஏற்படும் கொப்பளங்கள், அரிப்பு மற்றும் வேர்குரு சரியாகும். மழைக்காலத்தில் ஏற்படும் தோல்நோய், தேமல், சேற்று புண் குணமாகும்