மன அழுத்தத்துக்கு மருத்துவம் தேவையா?

358

வருடந்தோறும் 1 கோடியே 20 லட்சம் பெண்களும், 60 லட்சம் ஆண்களும் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுவதாகச்  சொல்கிறது தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்ட்டல் ஹெல்த் அமைப்பு. மன அழுத்தப் பிரச்னையானது ஆண்களைவிட  பெண்களையே அதிகம் தாக்குவதை இந்தப் புள்ளிவிவரம் உறுதி செய்திருக்கிற நிலையில், அதிலிருந்து விடுபடவும், வராமல்  தடுக்கவும் வழிகளைச் சொல்கிறார்  மருத்துவர் நிவேதிதா.

பூப்பெய்துகிற காலம் வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தமானது ஒரே அளவில்தான் இருக்கிறது. பூப்பெய்திய  பிறகு பெண்களது மன அழுத்தம் ஆண்களைவிட2 மடங்கு அதிகரிக்கிறது. இந்தப்பருவத்தில் உண்டாகிற ஹார்மோன்  மாற்றங்கள், பெண்ணின் வாழ்நாள் முழுவதும் பல்வேறு காலக்கட்டங்களில், அதாவது, கர்ப்ப காலம், குழந்தைப்பேறு,  மெனோபாஸ் என நீடிக்கிறது. குழந்தைப் பேற்றுக்குப் பிறகும், மெனோபாஸை நெருங்கியும் வருகிற நாட்களில் இந்த மன  அழுத்தம் அதிகமாகும். காரணம், பெண் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்கள்தான்.

இவை தவிர, அவர்களது மன அழுத்தத்துக்கு, வேறு காரணங்களும் இருக்கலாம். குடும்பப் பின்னணியில் மன அழுத்தம்  இருப்பது, இதயக் கோளாறுகள், வேறு ஏதேனும் தீர்க்க முடியாத நோய்கள், திருமண உறவில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம்  மாதிரியான பிரச்னைகளுக்கு எடுத்துக் கொள்கிற மருந்துகளின் விளைவு, வேலை இழப்பு அல்லது நெருங்கிய நபரின் எதிர்பாரா  மறைவு, சமீபத்தில் நடந்த தீவிர அறுவை சிகிச்சை, குழந்தைப் பருவத்தில் சந்தித்த பாலியல் வன்முறை, இயல்பிலேயே  எதற்கெடுத்தாலும் கவலையோ, படபடப்போ கொள்கிற சுபாவம்போன்றவையும் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

வெறுமையான உணர்வு, எதிலும் லயிப்பில்லாத மனநிலை, மறதி, குற்ற உணர்வு, நம்பிக்கையின்மை,முடிவெடுக்க முடியாதது,  தூக்கமின்மை,தற்கொலை எண்ணம், தலைவலி, செரிமானக் கோளாறுகள், வலி போன்றவற்றுக்கு எடுத்துக் கொள்கிற  சிகிச்சைகள் பலனளிக்காதது போன்றவை பெண்களின் மன அழுத்தத்துக்கான அறிகுறிகளாக இருக்கலாம். எல்லாக்  காரணங்களாலும் ஏற்படுகிற மன அழுத்தத்துக்கு மருத்துவம் தேவையில்லை.

மனமாற்றமே போதும். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, உடற்பயிற்சி செய்வது, இயற்கையை ரசிப்பது, வளர்ப்புப்  பிராணிகளுடன் நேரம் செலவழிப்பது, மனதுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பொழுதுபோக்கில் அல்லது வேலையில் தீவிரமாக  ஈடுபடுவது, மிக முக்கியமாக மற்றவர்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகுவது…. இவற்றின் மூலமே மன அழுத்தத்தில் இருந்து  வெளியே வரலாம். ஆரோக்கியமான உறவுகளும் நட்பும் சூழ வாழ்கிறவர்களுக்கு இந்த மன அழுத்தம் வருவதில்லை என்பதை  ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன

SHARE