ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து, தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியிருக்கின்றார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தி அடைந்திருப்பவர்களையும் ஏனைய தமிழ் இயக்கங்களையும் இணைத்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கப்போவதாக தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருணா தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஆனந்தசங்கரி அவர் உட்பட ஏனையவர்களையும் இணைத்து கொண்டு புதிய கூட்டணியை உருவாக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை படிப்படியாகக் குன்றி வருகின்றது. அவர்களின் ஆதரவாளர்களே ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டுமென விரும்புகின்றார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவை சேர்ந்த சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உட்பட பலரை தான் இணைத்து கொண்டு புதிய கூட்டணியை உருவாக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணிக்கு தான் தலைமை தாங்க உள்ளதாகவும் கருணாவுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியை விட்டு ரெலோ இயக்க தலைவர் செல்வம் வரமாட்டார். அவர் தமிழரசுக்கட்சியினருக்கு ஆமா போட்டுக்கொண்டு இருப்பார். எனவே சுரேஷ் போன்றவர்களை இணைத்து கொண்டு புதிய கூட்டணியை அமைக்கப் போவதாகவும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை டக்ளஸ் தேவானந்தாவுடனும் ஆனந்தசங்கரி பேசியுள்ளதாக தெரியவருகிறது.
சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆனந்தசங்கரியுடன் இணைவது பற்றி மட்டக்களப்பில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ஆயிரம் வாக்குகளை கூட எடுக்க முடியாத ஆனந்தசங்கரியுடன் இணைவதற்கு நாங்கள் என்ன பைத்தியக்காரர்களா என கேட்டார். சுரேஷ் போனால் போகட்டும் நாங்கள் போகமாட்டோம் என அவர் தெரிவித்தார்.