கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் முறையாக போதியளவு பயிற்றுவிக்கப்படாத பணியாளர்கள் பணியாற்றுவதனால் பெருமளவுக்கு சிறுவர் துஸ்பிரயோகங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட சிறுவர் நன்நடததை உத்தியோகத்தர்கள் மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே மேற்படி கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆறு சிறுவர் இல்லங்களில் 567 சிறார்கள் காணப்படுகின்றனர் இவர்கள் வறுமை காரணமாகவும் யுத்தம் மற்றும் இதர காரணங்களால் பெற்றோர்களை இழந்தவர்களாகவும் உள்ளனர்.
எனவே இவ்வாறான நிலைமைகளில் அங்கு பணியாற்றுகின்ற பணியாளர்கள் அனைவரும் சிறுவர் பராமரிப்பு தொடர்பில் போதியளவு பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் ,ஆனால் அவ்வாறில்லை இது அதிகளவுக்கு சிறுவர்கள் உடல் உள ரீதியாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் சூழலை தோற்றுவிக்கும். அத்தோடு சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் மோசமாக வழிநடத்தப்படுவதற்கும் ஏதுவாக அமையும் எனக் குறிப்பிட்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள் சிறுவர்கள் தொடர்பான அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உதவுயுடன் சிறுவர் இல்லங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீள்குடியேற்றப்பட்டு ஜந்து வருடங்களை கடந்து விட்ட நிலையில் தற்போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுவது மாவட்டத்தில் உள்ள சிறுவர் நலன்சார்ந்த உத்தியோகத்தர்களின் பொறுப்பற்ற செயற்பாடு என மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். எனவே இனியும் காலம் தாமதிக்காது சிறுவர் இல்லங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு சிறுவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது