அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க களவாடினாரா என்பது குறித்து அறிவிக்குமாறு நீதிமன்றம், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பெறுமதி மிக்கப் பொருட்களை களவாடியதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச் சாட்டுடன் எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு தொடர்பு உண்டா என்பதனை எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றில் அறிவிக்குமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் குறித்து மூன்று ஆண்டுகள் விசாரணை நடத்தி சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், இந்த களவு சம்பவம் தொடர்பில் எந்தவொரு சந்தேக நபரின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட வீடொன்றில் காணப்பட்ட பொருட்களே இவ்வாறு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த காலப்பகுதியில் உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
150 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை களவாடியதாக தமது கட்சிக்காரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என எஸ்.பி. திஸாநாயக்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.