பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் நிலைநிறுத்தப்பட்டிருந்தமை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய விளக்கம் கோரியுள்ளார்.நேற்றைய தினம் பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு தொகுதி மாணவர்கள் பாராளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு மேலதிக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக பதில் காவல்துறை மா அதிபர், சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க வரும் எந்தவொரு பொதுமகனையும் காவல்துறையினர் தடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றிற்கு அருகாமையில் காவவ்துறையினரை குவித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ உத்தரவு பிறப்பிக்கவில்லை என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தற்போது சுயாதீனமாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.