காவல்துறை மா அதிபர் மற்றும் கொட்டாதெனிய காவல் நிலைய உத்தியோகத்தர்களிடமிருந்து பத்து மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொட்டாதெனிய மாணவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கொட்டாதெனிய சேயா என்ற நான்கரை வயது சிறுமி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 17 வயதான மாணவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
காவல்துறை மா அதிபர் மற்றும் ஐந்து பேருக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பாடசாலை மாணவர், இந்த கொலையுடன் தொடர்புபடவில்லை என மரபணு சோதனைகளின் மூலம் நிரூபணமானதனைத் தொடர்ந்து வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தம்மை காவல்துறையினர் தாக்கியதாக மாணவர், குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவரும் இலங்கை ஆசிரியர் சங்கமும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.