நியாயமான கோரிக்கையை முன்வைத்து, நிராயுதபாணிகளாகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்-எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.

338

 

நியாயமான கோரிக்கையை முன்வைத்து, நிராயுதபாணிகளாகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது பொறுப்பற்ற விதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

hqdefault1

பின்நோக்கி நகர்ந்த மாணவர்கள்மீது எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது? எனவே, இந்த சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்தபின்னர், விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- “எச்.என்.டி.ஏ. மாணவர்கள் கடந்த 29 ஆம் திகதி கொழும்பு, ஹோட் பிளேசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள்மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டன என்பதை தொலைக்காட்சிகளில் நாம் பார்த்தோம். மாணவர்களின் கோரிக்கை நியாயமானதாகும். அதை அடைவதற்காகவே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அவர்கள் ஆயுதம் வைத்திருக்கவில்லை. மாணவர்களிடம் பொல்லுகளும் இருக்கவில்லை. நிராயுதபாணியாகவே அவர்கள் இருந்தனர். வீதித்தடையை மாணவர்கள் எட்டியபோது, தண்ணீர் பீச்சப்பட்டது. மாணவர்கள் அதையும் தாண்டி முன்நோக்கிச் செல்லவில்லை. அவர்கள் பின்நோக்கியே நகர்ந்தனர். இவ்வாறு அவர்கள் பின்நோக்கிவரும்போதுதான் பொல்லுகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு காயமும் ஏற்பட்டது. மேலும் சிலர் வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டனர். எனவே, பின்நோக்கி நகர்ந்த மாணவர்கள் எதற்காக தாக்கப்பட்டார்கள்? இது நியாயத்துக்கு புறம்பான பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கையாகும். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரே இவ்வாறு செயற்பட்டுள்ளனர். இதுதான் நல்லாட்சியின் விளைவா? நாம் ஜனநாயக நாடொன்றிலேயே வாழ்கின்றோம். எனவே, ஜனநாயக வழியில் போராடும்போது, அவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படவேண்டும். காலனித்துவ நாட்டில் நாம் வாழவில்லை. உயர் அதிகாரிகள் உரிய வகையில் செயற்பட்டிருந்தால் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும். எனவே, இவர்கள் பற்றியும் விசாரிக்கப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதேவேளை, நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளது. இது தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கில் படித்த இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். எனவே, அங்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்”

SHARE