வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் இருக்கவில்லை. – இவ்வாறு கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை இனச்சுத்திகரிப்பு எனக்கூறி சிலர் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- முஸ்லிம் மக்களை முழுமையாக இந்த மண்ணில் இருந்து அகற்றும் எண்ணம் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை. 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, வடக்கு மற்றும் கிழக்கு என்பது முஸ்லிம் மக்களுக்கும் உரிய தாயகம் என்பதனைக் குறிப்பாக தமிழ் மக்களுக்குள்ள சமத்துவமான உரிமை, முஸ்லிம் மக்களுக்கும் உண்டு என்பதனை புலிகளது தலைமை வெளிப்படுத்தியிருந்தது. முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்காக 2002 ஆம் ஆண்டில் பகிரங்கமான மன்னிப்புக் கோரியுள்ள புலிகள், முஸ்லிம்களை மீண்டும் வடக்கில் வந்து மீளக்குடியமறுமாறும் அழைத்திருந்தனர் என குறிப்பிட்டார்.