சம்பந்தனுக்கான பாராட்டும், உருவாகியுள்ள சந்தர்ப்பமும்

294
வடக்கின் பிரச்சினைகளை எவ்வாறு நோக்குகின்றாரோ அதேபோன்று தெற்கின் பிரச்சினைகளையும் நோக்கும் இலங்கையின் உண்மையான தேசியத் தலைவர் இரா. சம்பந்தன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் சபையில் புகழாரம் சூட்டியுள்ளார்.

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் உயர் கல்வி அமைச்சுக்கு முன்பாக பொலிஸாரால் தாக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரான இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விசேட வினாவை எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தனுக்கு இவ்வாறு புகழாரம் சூட்டியிருந்தார்.

தென்பகுதியில் காணப்படும் ஏனைய பிரச்சினைகளையும் இரா. சம்பந்தன் இங்கு எழுப்புவார் என நான் நம்புகின்றேன் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்திருக்கின்றார்.

கடந்த 29ம் திகதி உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி கற்கை மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியிருந்தனர்.

பேரணியாக வந்த இவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் மஹிந்த ஆதரவு எம்.பி.க்கள் பதாதைகளை ஏந்தி தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்தியிருந்தனர். இதனால் பாராளுமன்றமே களேபரமானது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து உரையாற்றியிருந்தார்.

நிராயுதபாணிகளாக பேரணி நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அத்தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய உயர் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டத்தை மீறுவதா நல்லாட்சியின் விளைவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கேள்வி எழுப்பியிருந்தார்.

மாணவர்கள் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை பல்கலைக்கழக பட்டத்திற்கு இணையானதாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமைதியாக நிராயுதபாணிகளாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அடிதடி வன்முறையில் ஈடுபடவில்லை.

இவ்வாறு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிஸார் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர். சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே சட்டத்தை மீறியிருக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் அடையாளம் காணப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இந்தக் கூற்றினையடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டியுள்ளார்.

இந்தப் பாராட்டானது இலங்கை அரசியல் போக்கில் ஒரு மாற்றத்தை காண்பிப்பதாகவே அமைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இத்தகைய நல்லெண்ணப் போக்கு காணப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குக்கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேச முடியாது என்ற நிலைப்பாடு அன்று காணப்பட்டது.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து யுத்தத்திற்கு அடிப்படைக் காரணமான இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இலங்கை வந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் 13வது திருத்த சட்டத்தின் கீழ் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியினை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கியிருந்தார்.

இதேபோல் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்நாட்டின் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போதும் 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காணப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த உறுதிமொழிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2011 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவினருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அரசாங்கத் தூதுக்குழுவிற்குமிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை ஆரம்பமானதையடுத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கமானது இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து தன்னிச்சையாக வெளியேறியிருந்தது.

அரசாங்கம் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது மாத்திரமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் என்ற ரீதியில் பேசவில்லை என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் கூட்டமைப்பினருக்குமிடையிலேயே பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச உட்பட பலரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர் வெறும் கண் துடைப்புக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைத்ததுடன் அந்தக் குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்தால் மட்டுமே பேச்சுக்கள் நடத்தப்படும் என தெரிவித்து வந்தது.

இதன் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்த போதிலும், கூட்டமைப்புடன் பேசுவதற்கு அன்றைய அரசாங்கம் முன்வரவேயில்லை.

இதனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது கானல் நீராகவே மாறியிருந்தது.

இந்த நிலையிலேயே கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களின் பேராதரவைப் பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார்.

இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கமும் உருவானது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்றது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு சூழலில் மூன்றாவது பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கு இணக்கம் தெரிவித்ததையடுத்தே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனாலும் கூட்டமைப்பின் சார்பில் ஒருவர் எதிர்க்கட்சி தலைவர் ஆவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போதும் தெரிவித்து வருகின்றனர்.

தமது தரப்பின் சார்பில் ஒருவரையே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இன்னமும் உள்ளனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரா. சம்பந்தன் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளில் மட்டும் அக்கறை செலுத்தாது தேசிய ரீதியிலான பிரச்சினைகளையும் அணுகி வருகின்றார்.

இதன் ஒரு கட்டமாகவே மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அவர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் உரிய நடவடிக்கைக்கு கோரியுள்ளார்.

தற்போதைய நிலையில் உருவாகியுள்ள இந்த அரசியல் சூழலானது இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

எனவே, பெரும்பான்மை இனத்தவர்களின் பேராதரவைப் பெற்ற இரு கட்சிகளும் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரே பாதையில் தற்போது நிற்கின்றன.

எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

SHARE