தங்களை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் சிலர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர். தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் 20 பேர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறு சட்டமா அதிபர் தங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர். இதன்படி, இரண்டு கைதிகள் மட்டுமே புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஏனைய சந்தேகநபர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார். ஜனாதிபதி உறுதியளித்ததைப் போன்று எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கூறிய அருட்தந்தை சத்திவேல், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இல்லாவிட்டால், அவர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர் என்றும் அருட்தந்தை சத்திவேல் கூறினார். நேற்றைய விசாரணையின் முடிவில், சந்தேகநபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதி வான், அவர்களின் வேண்டுகோள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார். –