மாலைதீவு பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்ட விடயம் தெடர்பில் உள்நாட்டு சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
18 வயதான மாலைதீவு பிரஜை ஒருவரை அண்மையில் இலங்கை அரசாங்கம் நாடு கடத்தியிருந்தது.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பயணம் செய்த அதிவேகப் படகு வெடித்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டிருந்த 18 வயது இளைஞரே நாடு கடத்தப்பட்டார்.
எவ்வாறெனினும், உத்தியோகபூர்வமான கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படாத நிலையில் வேறும் நாட்டு பிரஜை ஒருவரை நாடு கடத்த முடியாது என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளா மஹசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
குறித்த மாலைதீவு இளைஞர் கைதானமை மற்றும் நாடு கடத்தப்பட்டமை குறித்து உள்ளக விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு மட்டுமன்றி, குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் மற்றும் வேறும் சில தரப்புக்களும் இந்த விடயத்தில் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மாலைதீவுப் பிரஜை நாடு கடத்தப்பட்ட விதம் நாட்டின் உள்நாட்டு குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்கு புறம்பான வகையில் இடம்பெற்றுள்ளதாகவே தென்படுகின்றது எனவும், விசாரணைகளின் நிறைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் கோரிக்கைக்கு அமைய குறித்த மாலைதீவு பிரஜையை நாடு கடத்தியதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள பேச்சாளர் லக்ஸ்மன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
மாலைதீவைச் சேர்ந்த அஹம் அஸ்ரப் என்ற 18 வயது இளைஞரே அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.