மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் தொடர்ந்தும் யானைகளின் வேட்டைக்கு மட்டக்களப்பு மக்களின் சொத்துக்கள் இரையாகிவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக யானைத் தொல்லைகள் அதிகரித்துள்ளன. கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் வீடுகளையும் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்துவதுடன் உயிர்களையும் பலியெடுத்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் யானைகளை கட்டுப்படுத்த மின்சாரவேலி அமைத்தல், மற்றும் யானை வெடிகளை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மாவட்ட செயலக உலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் யானைகளை கட்டுப்படுத்த இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் ஊத்துச்சேனை கிராம மக்கள்.
கடந்த சில தினங்களின் முன்னர் தமது கிராமத்திற்குள் நுழைந்த யானைகள் வீடுகளை சேதப்படுத்தியதுடன் தமது காணியில் உள்ள பயன்தரு மரங்களையும் அழித்துள்ளதாக கூறுகின்றனர்.
இதேவேளை யானைகளின் தாக்குதலில் இருந்து வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த தாம் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தமது கிராமத்தில் யானை அபாயம் உள்ளபோதும் அதனை தடுக்க நடவடிக்கை இன்னமும் மேற்கொள்ளவில்லை என்று கூறும் ஊத்துச்சேனை மக்கள் யானைகள் எப்போது வரும் என்ற அபாயத்தில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.