ஈழத்து நவீன அரங்க வரலாற்றில் பலர் பற்றிப் பேசப்படினும் சில ஆளுமையாளர்கள் பெரிதும் அறியப்படாத இலைமறை காய்களாகவே உள்ளனர். இந்த வரிசையில் இளைய பத்மநாதன் அவர்கள் ‘கந்தன்கருணை’ நாடகம் மூலமாக சிறிதளவு பேசப்படினும் அதற்கு அப்பால் இவரது அரங்கச் செயற்பாடானது அறியப்படவில்லை. அண்மையில் இவருடனான நேரடியான கலந்துரையாடலின் போது இவரது புதிய அரங்கப் போக்குகள் பற்றிய பல தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது.
மகாபாரதம்இ இராமாயணம் மற்றும் வரலாற்று சம்பவங்களின் பல பகுதிகளைத் தேர்ந்தெடுத்து தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றில் மாற்றங்களைச் செய்து முற்போக்குச் சிந்தனைகளைப் புகுத்தி எமது பாரம்பரிய அரங்கில் காணப்படுகின்ற ஆட்டக்கோலங்களையும் பாடல் மெட்டுக்களையும் பயன்படுத்தி நாடகங்களை படைக்கும் ஆற்றல் உடையவர். அத்துடன் மேடை, வட்டக்களரி, வீதி, திறந்த வெளி, முக்கோண அரங்கு என பலவகையான அரங்குகளை தனது நாடகங்களுக்காக பயன்படுத்தியமை அரங்கில் இவரது ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.
மாச்சிச சிந்தனையாளரும் அரங்கவியலாளருமான இவர் இளையதம்பி இளையபிள்ளை தம்பதியினருக்குப் புதல்வனாக 1937.11.22 அன்று நெல்லியடியில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை யாழ் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலும் பயின்று பின்னர் அரசாங்க இலிகிதராக பணியாற்றியதோடு சிறுவயது முதலே அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளிலும் தனது அரங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கிறார்.
1960களில் யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறை, தீண்டாமை என்பன பாரிய பிரச்சனையாக காணப்பட்டபோது இதற்கு எதிராக சிறுபான்மைத் தமிழர் மகா சபை செயற்பட ஆரம்பித்தது. இவ்வமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களை மாத்திரம் கொண்டிருந்ததனால் வலுவிழந்து காணப்பட, சண்முகதாசன் தலைமையில் ஏனைய தமிழச்; சமூகத்தவர்களையும் இணைத்து தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இவ்வமைப்பானது தங்களது விழிப்புணர்வு, மற்றும் பிரச்சாரக் கருவியாக ‘கந்தன் கருணை’ என்னும் நாடகத்தை பயன்படுத்திக் கொண்டது. ஈழத்து அரங்க வரலாற்றிலே இந்நாடகம் திருப்புமுனையாக அமைந்ததுடன் இதன் உருவாக்கத்தில் இளைய பத்மநாதன் அவர்களது பங்களிப்பு அளப்பெரியது.
இவ்வமைப்பினர் என்.கே.ரகுநாதன் அவர்களுடைய வசனநடையில் அமைந்த எழுத்துப் பிரதியை பாடல் வடிவில் காத்தவராயன் கூத்துப் பாணிக்கு மாற்றியமைத்து கந்தன் கருணை நாடகத்தை படைத்தனர். இந்நாடகம் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தினரது கூட்டுமுயற்சியினூடாக உருவாக்கப்பட்ட போதிலும் பாடல் மெட்டு, பாடல் வரிகள் என்பனவற்றில் இளைய பத்மநாதன் அவர்களது பங்கு முதன்மையானது. இந்நாடகம் அம்பலத்தாடிகள் சார்பாக முன்னெடுக்கப்பட்டதுடன் பல தடைகளையும், தாக்குதல்களையும் எதிர்;கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மேடையேற்றப்பட்டது. மாவிட்டபுரத்தில் இந்நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தங்களை உயர்ந்த சாதியினராகக் கருதியவர்கள் மேடையை நோக்கி கற்களை வீசினர். உடனே மேடையில் இருந்த கணபதிப்பிள்ளை அண்ணாவியார் எழுந்து தலையில் கற்கள் படாமலிருக்க தலைப்பாகை கட்டிக்கொண்டு நாடகத்தை முன்னெடுத்தார். பார்வையாளர் பகுதியிலிருந்து ஒருவர் ஓடிவந்து நாடகத்தை நிறுத்தும்படி கூற முருகனுக்கு நடித்துக் கொண்டிருந்தவர் தனது கையில் இருந்த வேலினால் அவருக்கு அடிக்க வேல் முறிந்தது. பின்னர் நாரதர் பாத்திரத்திற்கு நடித்தவரும் தனது கையிலிருந்த வீணையினால் அந்நபரைத் தாக்க அவர் மயங்கி விழுந்துவிட்டார். உடனே சிலர் ஓடிவந்து ‘தோழர் தோழர் இவர் நம்மட ஆள். நாடகத்தை இடைநிறுத்தி கல்லெறிபவர்களை துரத்திவிட்டு நாடகத்தை தொடங்குவம் என்று சொல்ல வந்தவர்’ எனக் கூறி கல்லெறிந்தவர்களை வெளியேற்றி நாடகத்தை தொடர்ந்தனர்.
இக்குழுவினர் மட்டுவில் எனும் இடத்தில் இந்நாடகத்தினை நிகழ்த்தச் செல்லும் போது பொலிசார் திரைகளை எடுத்துச் சென்றதன் காரணமாக அங்கு நாடகம் நிகழ்த்த முடியாமல் திரும்பிவிட்டனர். இவ்வாறாக இந்நாடகத்தின் போது தாங்கள் பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்நாடகத்தை தாசியஸ் அவர்கள் நடிகர் ஒன்றியத்திற்காக நெறிப்படுத்திய போது இவர் தலைமைப் பக்தர் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகின்ற வில்லாளன் ஏகலைவனின் கதையை மையமாகக்கொண்டு தற்கால நடைமுறைக்கேற்ப சில மாற்றங்களைச் செய்து ‘ஏகலைவன்’ நாடகத்தை படைத்துள்ளார.; இந்நாடகத்தில் சிறு குழுக்கள் மற்றும் சமூகங்களிடம் ஆயுதங்கள், போர்க்கலைகள் இருப்பதனால் அதிகாரத்தரப்பிற்கு விளையும் பாரதூரமான ஆபத்துக்கள் மற்றும் இது அதிகார வர்க்கத்துக்கே உரித்தானது போன்ற கருத்துக்கள் வெளிப்பட்டு நிற்பதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இப்படைப்பிற்கான பாடல்கள் வடமோடிக் கூத்து மெட்டுக்களில் உருவாக்கப்பட்டன.
இலங்கையில் சேக்குவரா பிரச்சனை இடம்பெற்ற காலப்பகுதியில் திருநாவுக்கரசு நாயனாரது கதையை அடியாகக் கொண்டு ‘யாமார்க்கும் குடியல்லோம்’ எனும் நாடகத்தை எழுதியுள்ளார். திருநாவுக்கரசு நாயனார் சைவத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறச் சம்மதிக்காததனால் அவருக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள், அதிலிருந்து அவர் மீண்ட விதம், எவ்வளவு துன்பங்களுக்கு முகங்கொடுத்தும் நாயனார் தனது முடிவில் உறுதியாக இருந்தமை போன்ற அம்சங்களை வெளிப்படுத்தி இந்நாடகத்தினை இசை நாடக வடிவில் படைத்துள்ளார்.
அதன் பிற்பாடு இந்தியாவிற்குச் சென்று அங்கு ஒன்பது வருடங்கள் தங்கியிருந்து பல இடங்களுக்கும் சென்று தெருக்கூத்துக்களைப் பார்த்தது மட்டுமன்றி அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகளையும் நடாத்தி பல நாடகச் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார்.
இந்தியாவில் முதன் முதலாக ‘கண்களுக்கு அப்பால்’ எனும் நாடகத்தினைத் தயாரித்து அரங்கேற்றியிருந்தார். நந்தி அவர்களின் சிறுகதையை வீதி நாடகப் பாணியில் மாற்றியமைத்து அந்நாடகத்தினை, மேடையில் நடித்துக்கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்ட மாக்சிச சிந்தனையாளரான சப்தர்கஸ்மியின் நினைவு நாளன்று மெரினா கடற்கரையில் அரங்கேற்றினார். இதன் கதையானது தாழ்த்தப்பட்ட சாதிக்காரனை வேலைக்காரனாகக் கொண்ட வீட்டு முதலாளி அவனை ஒடுக்குவதும் வீட்டு முதலாளிக்குக் கண் பார்வையற்றுப் போக வேலைக்காரன் இறந்ததும் அவனது கண்ணை முதலாளிக்குக் கொடுப்பதும் பின்னர் எடுத்துரைஞர்கள் ‘தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று அவனை ஒதுக்கி நடத்தினீர்.. தற்போது எப்படி அவனது கண்ணால் பார்ப்பீர்? ‘ எனப் பல கேள்விகளை எழுப்பி சாதிப்பிரச்சினை தொடர்பாக சமூகத்தைச் சிந்திக்க வைப்பதாக அமைகின்றது. படைப்பாளர் இதில் கண் மாற்றும் சத்திரசிகிச்சைக் காட்சியை கண்ணப்பனார் தனது கண்களை குத்தி எடுத்து சிவனுக்கு கொடுப்பது போன்றதாகப் படைத்திருந்தார். இந்நாடகத்தின் பாடல் மெட்டினை யாழ் வசந்தன் கூத்திலிருந்தும் அதற்கான ஆட்டக் கோலத்தை கோலாட்டத்தில் இருந்தும் பெற்றுக்கொண்டார்.
இவர் மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு மூன்று நாள் பயிற்சிப் பட்டறையை நடாத்தி பேட்டோல் பிறக்ட் இன் ‘வுhந நுஒஉநிவழைn யுனெ சுரடந’ எனும் நாடகத்தினைத் தமிழில் ‘ஒரு பயணத்தின் கதை’ என நெறிப்படுத்தினார். இதன் ஆற்றுகை இவருடைய ஏனைய நாடகங்களிலிருந்து வித்தியாசமானது. இந்நாடகத்தில் முதலாளி, தொழிலாளி, வழிகாட்டி ஆகிய மூன்று பாத்திரங்களை மட்டுமே பயன்பத்தியிருந்தார். இதன் ஆற்றுகையின் போது ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தலா மூன்று நடிகர்கள் என மொத்தமாக ஒன்பது நடிகர்களைக் கொண்டு, ஐம்பது அடி விட்டம் கொண்ட பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட வட்டக்களரியில்; அளிக்கை செய்யப்பட்டது. இந்நாடகத்தில் முகமூடி பயன்படுத்தப்பட்டதுடன் உலகப்படம் வரையப்பட்ட பலூனைச் சுமந்த வண்ணம் தொழிலாளி காட்சியளித்தார். அத்துடன் துணிகளைப் பயன்படுத்தி ஆறு, மலை போன்ற காட்சிகளை உருவாக்கியிருந்தார். ஒவ்வொரு நடிகனும் அடுக்கடுக்காகப் பல வர்ணங்களிலான ஆடைகளை அணிந்திருந்து பின்னர் பாத்திரத் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஆடையாகக் களைந்து பாத்திர மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் உடையமைப்பினை உருவாக்கியிருந்தார். இதற்கான பாடல் மெட்டுக்கள் மற்றும் ஆட்டக் கோலங்கள் என்பன வசந்தன் கூத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன.
அடுத்து இவரது நாடகங்களில் ‘தீனீப்போர்’ முக்கியமானது. இக்கதையின் ஆரம்பத்தில் காட்டு மிருகங்களும் நாட்டு மிருகங்களும் சண்டையிட்டு பின்னர் சாப்பாட்டின் போது இரு குழுக்களும் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர். பிற்பாடு இம்மோதலானது விலங்கு உண்ணிக்கும் தாவர உண்ணிக்குமான மோதலாக மாறுகின்றது. சண்டைக்காட்சிக்காக சிலம்பாட்டமும் சூரன்போரிலிருந்து எடுக்கப்பட்ட வண்டியாட்டம், ஊஞ்சலாட்டம், கப்பலாட்டம் போன்றனவும்; இசைக்காக தப்பு வாத்தியமும் பயன்படுத்தப்பட்டது. அத்தோடு இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘ஏகலைவன்’ நாடகத்தினையும் இங்கு மேடையேற்றியிருந்தார்.
பின்னர் இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று நாடகத்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று பல்வேறு அரங்கச்செயற்பாடுகளை இன்றுவரை முன்னெடுத்துவருகின்றார். அவுஸ்திரேலியாவில் ‘கண்களுக்கு அப்பால், ஒரு பயணத்தின் கதை, செஞ்சோற்றுக்கடன், தனு, அற்றைத் திங்கள், காத்தவன் கூத்து, யாழ்ப்பாடி, அண்ணை எங்கே போன்ற நாடகங்களை ஆற்றுகை செய்திருந்தார்.
‘செஞ்சோற்றுக்கடன்’ நாடகமானது ஏகபாத்திர அமைப்பினைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இதில் கர்ணனது கதை ஏகபாத்திர அமைப்பிÇடாக வெளிப்படுத்தப்பட்டது. இதற்கான பாடல் காத்தவராயன் கூத்து மெட்டிலும் ஆடல் பரதநாட்டியப் பாணியிலும் அமைந்திருந்தது.
‘தனு’ நாடகத்தில் பீஸ்மரை பழிவாங்குவதற்காக அம்பை சிகண்டியாக உருமாறிய கதை பேசப்படுகின்றது. அம்பை சிகண்டியாக உருமாறிய காட்சியை வெளிப்படுத்திக்காட்ட தெருக்கூத்தில் முக்கிய பாத்திரங்களின் வரவின் போது திரை பிடிக்கின்ற தன்மையைப் போன்று இங்கும் பயன்படுத்தினார். இரு பாத்திரங்களுக்கும் இராணுவ உடை பயன்படுத்தப்பட்டதுடன் காத்தவராயன் கூத்து மெட்டில் பாடல்களும் ஆடலாக வெறியாட்டமும் பயன்படுத்தப்பட்டது.
‘அற்றைத் திங்கள்’ நாடகத்தில் பாரிவள்ளல் மன்னனுடைய வாழ்க்கையும் அவனது விருந்தோம்பல் நாட்டு வளம் என்பனவும் வர்ணனையாகக் கூறப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இணைந்து இவனை சதியால் வீழ்த்திய வரலாறு நிகழ்த்திக் காட்டப்பட்டது. இந்நாடகத்தில் பரதம், கர்நாடக இசையோடு பின்னணிக் காட்சிகளாக முல்லை, தோ,; மேடு போன்றனவும் பயன்படுத்தப்பட்டது. சுவாரசியமான பாத்திரமான நகைவேடம்பர் பாத்திரத்தை இவர் ஏற்று நடித்ததுடன் கிழவர் மற்றும் இளமைத் தோற்றத்தைக் காட்ட முகமூடியையும் பயன்படுத்தினார். இதில் மன்னன் பார்வையாளர்களுக்குப் பின்புறத்தைக் காட்டியவாறு அமர்ந்திருக்க நடனமாடும் பெண்கள் மன்னனுக்கு முன்னால் பார்வையாளர்களை நோக்கியவாறு நடனமாடிய காட்சியைப் படைத்தமை இவரது துணிச்சலான செயற்பாட்டைக் காட்டுகின்றது.
யாழ்ப்பாணம் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த கர்ண பரம்பரைக் கதையை மையமாக வைத்து கவிஞர் அம்பி அவர்கள் வானொலிக்கு கவிதை நாடகமாகச் செய்த நாடகத்தினை ‘யாழ்ப்பாடி’ என்னும் பெயரில் இளைய பத்மநாதன் அவர்கள் சிறுவர் நாடக பாணிக்கு மாற்றி அவுஸ்த்திரேலியாவின் சிட்னியில் மேடையேற்றினார். இதில் வட இலங்கையை அ10ண்டு கொண்டிருந்த ஏலேலோசிங்க மன்னனைச் சந்திக்க யாழ்ப்பாடி என்னும் கட்புலனற்றவர் சென்றபோது மன்னனுடைய வழமையான செயற்பாடான கட்புலனற்றவர்களை நேரடியாகப் பார்வையிடாது திரைபோட்டுப் பார்க்கும் முறையில் சந்தித்தார். இக்காட்சியை யாழ்ப்பாடி தத்துரூபமாகப் பாடியதால் மன்னன் வியந்து அவரைக் கட்டித் தழுவி மணலியைப் பரிசாக ஒப்படைத்தார். யாழ்ப்பாடி தனது உறவினர்களை அழைத்து வந்து கிணறு வெட்டிக் குடியமர்த்தி ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் சூட்டிய கதை நடித்துக் காட்டப்பட்டது. இதில் இளைய பத்மநாதன் அவர்கள் யாழ்ப்பாடியாக நடித்ததுடன் மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபாகரன் என்னும் கூத்துக் கலைஞர் அ10ற்றுப்படுத்துக் கூத்தராக நடித்தார்.
காத்தவராயன் கூத்தினை தற்காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றம் செய்து ‘காத்தவன் கூத்து’ என்ற பெயரில் அரங்கேற்றினார். பாடல், மெட்டு, ஆடல் என்பன காத்தவராயன் கூத்தில் இருந்தே எடுக்கப்பட்டது. இவர் இறுதியாக ‘அண்ணை எங்கே?’ என்னும் நாடகத்தினை எழுதினார். நெறியாளர் தாசியஸ் பிரித்தானியாவில் நாடகம் போடுவதற்காக அண்ணை எங்கே? என்னும் பெயரில் நாடகம் ஒன்றை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க எழுதிய நாடகமே இது. இதனை சிட்னியில் இவர் நெறியாள்கை செய்தும் உள்ளார். இது மனிதர் இறந்த பின்னரான ஈமச் சடங்கிற்கான உரிமையைப் பேசுவதாக அமைகின்றது. மனிதருக்கும் பிராணிகளுக்கும் இடையிலான உறவு, மனிதர் இறந்த பின்னர் மிருகங்களின் நன்றிக்கடன் போன்றவற்றை உலகில் பல பாகங்களிலும் நடந்த உண்மைச் சம்பவங்களின் சில சேதங்களை எடுத்து பகுதி பகுதியாகக் கவிதை நாடகமாகப் படைத்தார்.
ஈழத்து அரங்கவியலாளர்களுள் தனித்துவமானவராகக் காணப்படும் இவர் அரங்கில் தமிழ்த் தேசிய அடையாளத்தை தேடுபவராகவும் கூத்துத்தான் எங்களது அடையாளம்; என்பதில் உறுதிப்பாடுடையவராகவும் காணப்படுவதோடு ஆடல், பாடல் இவரது படைப்பில் பிரதான இடத்தைப் பிடிப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
ந.கோகுலன்
விடுகை வருடம்
நுண்கலைத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.