முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஜேம்ஸ் பெக்கர் கிடைத்ததைப்போல பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜோர்ஜ் செராக் கிடைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பிரதமரின் இடைக்கால பொருளாதார திட்டமானது அரச துறையை தனியார் மயப்படுத்தி நாட்டை நாசப்படுத்தும் திட்டம் என்றும் இது ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் பிரேமதாசாவின் கலப்புத்திட்டம் என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நாட்டில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கான சூழல் காணப்படுவதாகவும் ஏற்றுமதி வீத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்றும் அனுரகுமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் மயப்படுத்தலினால் சர்வதேச வர்த்தக சந்தையிலும்பொருளாதார நடவடிக்கைகளிலும் நாடு பாரிய பின்னடைவை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்களை செலுத்தம் இந்தியாவின் தலையீடாக கருதப்படும் சீபா ஒப்பந்தத்தில் இன்றைய அரசும் ஈடுபடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச சட்டவிரோத வியாபாரியான ஜோர்ஜ் செராக் பசுபிக் – ஆசியா நாடுகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் என்றும் அவரை இணைத்துக்கொண்டு நாட்டுக்கு கறுப்புப் பணத்தை கொண்டுவர அரசு முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.