விஜயதாசவை பதவி விலக்குமாறு சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை

320

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா கோரியுள்ளார்.
நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பான வகையில் நீதி அமைச்சர் செயற்பட்டு வருவதாகவும் அவரை பணி நீக்குமாறும் பொன்சேகா, பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை நீதி அமைச்சர் பாதுகாக்க முயற்சிப்பதாகவும் இது நல்லாட்சிக் கொள்கைகளுக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் 8ம் திகதி ஈட்டப்பட்ட வெற்றி சீர்குலைவதற்கு முன்னதாக, நல்லாட்சி அதிகாரத்திற்கு களங்கம் கற்பித்து வரும் விஜயதாச ராஜபக்ஸ பணி நீக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் மூலம் அடுத்த தடவை வெற்றியீட்ட முடியாது என புரிந்துகொண்ட விஜயதாச ராஜபக்ஸ, கட்சி மாறும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஸக்களுக்கு தற்போதிருந்தே சார்பாக கருத்து வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
2000 மில்லியன் ரூபா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது தமக்கு கிடைக்கவில்லை எனவும், 250 மில்லியன் ரூபா கிடைத்ததாகவும் அதனை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிட்டதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் தாம் அரசியலில் பிரவேசிக்க ஒத்துழைப்பு வழங்கியதாகவும் விஜயதாச ராஜபக்ஸ ஒரு ஒத்துழைப்பையும் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதியாகவும் பணம் சம்பாதிக்காது வெறும் சட்டத்தரணியாகவே பணம் சம்பாதித்திருந்தால் இவ்வளவு பெரிய செல்வந்தராக விஜயதாச ராஜபக்ஸ உருவாகியிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரக்னா லங்கா நிறுவனத்தில் கடயைமாற்றி வரும் 4000 படைவீரர்களில் 2000 படைவீரர்கள் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE