தொடரும் மழையால் சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் அவலம்

579
வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.
வவுனியாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வாழும் 189 குடும்பங்கள் கடும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக 1994 ஆம் ஆண்டு சிதம்பரபுரம் நலன்புரிநிலையம் உருவாக்கப்பட்டு 4,000 வரையான குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பலர் மீள்குடியேற்றப்பட்ட போதும் காணிகளற்ற 189 குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் அங்கேயே தங்கியுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரணம், மின்சாரம் உள்ளிட்ட அரச உதவிகள் முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில் மழை வெள்ளத்திற்கும் முகம் கொடுத்துள்ளனர்.

தற்காலிக தார் சீற்றுக்களினால் ஆன கூரைகள் மழைக்கு நனைந்து கிழிந்து வீடுகளுக்குள் மழை நீரும், வெள்ள நீரும் புகுந்த நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளுக்குள் இருந்து வாழ போராடுகின்றனர்.

மழை காரணமாக வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் பரீட்சைக்கு கூட படிக்க முடியாத மற்றும் தோற்ற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இம் மக்களுக்கு காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அது மந்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE