கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை வெள்ளத்தினால் வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளது. நீர்வரத்து கூடுதலாக வந்து பாய்ந்து கொண்டிருப்பதால் சேதமடைதல் இன்னும் அதிகமாகலாம் என நேரில் பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கடந்த 2015-11-16 அன்று மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ரவிகரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இப்பாலம் முன்னோர்களின் கருத்துக்களின்படி 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் பழமை வாய்;ந்ததாக இருப்பதுடன் இறுதிப்போரின் காலப்பகுதியிலும் பலத்த சேதங்களை சந்தித்தது. சிறிய சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் பழமையான இப்பாலம் ஆறுபாயும் காலத்தில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
முல்லைத்தீவு நகரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் போக்குவரத்துகள் மிக அதிகமானவை இப்பாலத்தினூடாகவே நடைபெறுகின்றது. பல நூற்றுக்கணக்கான மக்கள் நாளாந்தம் பயணிக்கின்றார்கள்.
மக்களின் பயன்பாட்டில் மீத்தேவையாக காணப்படும் இப்பாலத்தை மீள்சீரமைக்க வேண்டியது முக்கிய கடமையாகின்றது. அகலமான பாதையுடன் அமைக்க கூடிய வகையில் இப்பாலம் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே மக்களின் கருத்தாகவுள்ளது.
சில்லாண்டுகளாக இப்பாலம் அமைக்கப்படவேண்டிய தேவையானது பல தரப்பினருக்கும் மக்களும் பொது அமைப்புகளும் விண்ணப்பித்தபடி இருந்தும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எம்மால் நிச்சயமாக வடமாகாணசபையின் கவனத்திற்கு இவை கொண்டு செல்லப்படும் எனவும் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்தார்.