கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த தேசிய மொழிகள் அமைச்சர் மனோ கணேசனை காணாமற்போனவர்களின் உறவினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் காணப்படுகின்ற மாணவி 2009ம் ஆண்டு காணாமற்போன தனது மகள் எனவும் தனது மகளை மீட்டுத் தருமாறு தாய் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இரட்டை வாய்க்கால் பகுதியில் இராணுவத்தினரின் சுற்றி வளைப்புக்குட்பட்டு காணாமற்போன தனது மகளைத் தேடிய வவுனியா வடக்கு நெடுங்கேணி பெரியமடுவைச் சேர்ந்த ஜெயவனிதா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 7ம் திகதி விநியோகிக்கப்பட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அன்னப்பறவை சின்னத்துடன் கூடிய தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் தனது மகள் பாடசாலை சீருடையுடன் தற்போதைய ஜனாதிபதியுடன் உரையாடுகின்ற படம் வெளியாகியிருந்ததாகவும் அதன் மூலம் தனது மகள் ஜெரோமி என அடையாம் கண்டுள்ளதாகவும் தெரிவித்து பல்வேறு முறைப்பாடுகளை செய்து வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் மனோ கணேனை சந்தித்த இத் தாயார் குறித்த பிரசார துண்டுப்பிரசுரம் மற்றும் மகளுடைய புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்களை காட்டி தனது மகள் 2009ம் ஆண்டிலிருந்து காணாமற்போன நிலையில் தனது பிள்ளையை தை மாதம் அடையாளம் கண்டு மகளை மீட்டுத் தருமாறு நான் ஜனாதிபதி முதற்கொண்டு எல்லோருடனும் மன்றாட்டமாகக் கேட்டிருந்தேன். ஆனால் இன்றுவரைக்கும் என்னுடைய மகளை யாரும் மீட்டுத்தரவில்லை.
பல தடவைகள் சம்பந்தன் உள்ளிட்ட பல அமைச்சர்களிடம் குறித்த ஆதாரங்களை காட்டி கதைத்ததாகவும் ஆனால் இதுவரைக்கும் எந்த பயனும் இல்லை என்றும் வேதனையுடன் குறிப்பிடுகின்றார்.
இந்நிலையில் குறித்த மாணவியினுடைய விபரங்களை பெற்றுக்கொண்ட மனோகணேசன் இது தொடர்பாக தான் ஆராய்ந்து பதில் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.