வடக்கிற்குச் செல்ல தீவிர ஆர்வம் காட்டும் இந்திய இராணுவத் தளபதி!

309

Gen-Dalbir-Singh-Suhag-sri-lanka-1இலங்கைக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்  வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும்  இராணுவப் பயிற்சித் தளங்களுக்குச் செல்வதில் தீவிர ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நேற்று இலங்கையை வந்தடைந்த போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செங்கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவரை கொழும்பிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் அரிந்தம் பக்சி, இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இலங்கை வந்தடைந்ததும் முதலாவதாக பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன் அவர் வடக்கில் உள்ள படைத்தளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களையும் பார்வையிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கும் செல்லவுள்ள இந்திய இராணுவத் தளபதி, பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

1987ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய அமைதிப்படையில் நிறுவன தளபதியாக ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE