வரவு – செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்புக்காக காத்திருந்த வேளையில் இதுவரை வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களும் இல்லாமல் செய்யப்பட்டதுக்கு எதிராக வைத்தியர்கள், 18 நாடாளாவிய சேவைகள் உயர் அதிகாரிகள் சங்கங்களுடன் இணைந்து நாடுமுழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்றுமுன்தினம் ஈடுபட்டு இருந்தார்கள்.
அதன் காரணமாக வட கிழக்கு உட்பட நாடு முழுவதும் அவசர நோயாளார் சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டு இருந்தன இந்நிலையில் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பேச்சு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தப் பேச்சு தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உப செயலர் வைத்தியர் சாயி நிரஞ்சன் தகவல் தருகையில் – ஜனாதிபதி எமது கோரிக்கைகளை மிகவும் ஆர்வமாக செவிமடுத்தார் மிக நீண்ட நேரம் கலந்துரையாடினோம். மிக விரைவில் நிதியமைச்சு, ஜனாதிபதி மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கதினரிடையே பேச்சுவர்த்தை ஒன்றை ஏற்படுத்தி பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வை பெற்று தர முயல்வதாக கூறினார்.
அதன் பிரகாரம் எமது போராட்டத்தை ஒத்திவைக்குமாறும் கோரினார். எமது சங்கமும் ஜனாதிபதியினதும் சுகாதார அமைச்சரினதும் கோரிக்கையும் கருத்தில் கொண்டு எமது போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. –
எனினும் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப் படாத பட்சத்தில் எம்முடன் இணைந்துள்ள 18 நாடாளாவிய சேவைகள் உயர் அதிகாரிகள் சங்கங்களுடன் இணைந்து எமது போராட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் அது தொடர்பிலான மேல் மாகாண அரச உயர் அதிகாரிகளின் மாநாடு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 8ஆம் திகதி இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் –