எந்தவொரு அரசியல் பிரபுக்கும் இனிவரும் காலத்தில் இராணுவ பாதுகாப்பு வழங்குவதில்லையென, பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இராணுவத்தினரை சிவில் கடமைகளில் ஈடுபடுத்துவது பொருத்தமற்றதென்றும் ஆகையால், முக்கிய அரசியல் பிரபுக்களுக்கு பொலிஸாரினதும் விசேட அதிரடிப்படையினரதும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதிக்கும், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினருமே பாதுகாப்பு வழங்கிவருவதாக குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கிடைக்கும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், நபர்களுக்கான பாதுகாப்பு குறித்து தீர்மானிக்கப்படுமென குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பிற்காக 500 இராணுவத்தினர் செயற்பட்ட நிலையில், அதனை உடன் விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரி கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. குறித்த பாதுகாப்பு அனுமதி தொடர்பில் இராணுவ தலைமையகத்தில் எவ்வித ஆவணங்களும் இல்லையென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.